26 Years of Porkkaalam: ”மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையும்..வலியும்” .. பொக்கிஷமான “பொற்காலம்” ரிலீசான நாள் இன்று..!
பொதுவாக சினிமாவில் மண் சார்ந்த, உணர்வுகள் சார்ந்த படைப்புகளை எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மிக முக்கியமானவர் சேரன்.2
இயக்குநர் சேரன் - மறைந்த நடிகர் முரளி கூட்டணியில் காலத்துக்கும் அழியாத பொக்கிஷமாக உருவான “பொற்காலம்” படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
யதார்த்த இயக்குநர் சேரனின் படைப்பு
பொதுவாக சினிமாவில் மண் சார்ந்த, உணர்வுகள் சார்ந்த படைப்புகளை எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மிக முக்கியமானவர் சேரன். பாரதி கண்ணம்மாவில் உணர்வு கலந்த சமூக பிரச்சினையை பேசியிருந்த அவர், இரண்டாவதாக பொற்காலம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் முரளி, மீனா, சங்கவி, வடிவேலு, ராஜேஸ்வரி, மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
மண்பாண்டம் தொழில் செய்து வரும் முரளிக்கு வாய் பேச முடியாத தங்கையாக ராஜேஸ்வரி உள்ளார். தொழில் நலிந்து வரும் நிலையில் முரளியின் தந்தை மணிவண்ணனோ குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, சூதாட்டத்தில் பணத்தை இழப்பவராக உள்ளார். முரளிக்கு நெசவு தொழில் செய்யும் மீனா மீது காதல் உண்டாகும் அதே நேரத்தில் சங்கவி முரளி மீது காதல் கொள்வார். முரளியின் நண்பராக வடிவேலு வருவார். தன் தங்கைக்கு எங்கெல்லாமோ மாப்பிள்ளை பார்ப்பார் முரளி. ஆனால் ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் தங்கைக்கு மாப்பிள்ளை எல்லாம் ரெடியாகும் நேரத்தில் திருமணத்துக்கு வைத்திருக்கும் பணத்தை அப்பா மணிவண்ணன் எடுத்து விடுவார். இதனால் திருமணம் நிற்க, நண்பரான வடிவேலு தங்கையை திருமணம் செய்ய முன் வருவார். ஆனால் அதற்குள் அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது என நினைத்து ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்வார். இதனால் தன் காதலை துறந்து, தங்கையைப் போல இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணை முரளி திருமணம் செய்து கொள்வதே பொற்காலம் படத்தின் கதையாகும்.
நெகிழ வைத்த காட்சிகள்
- முதலில் இப்படத்தில் முரளி தொடங்கி வடிவேலு வரை அனைத்து கேரக்டர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
- தான் கருப்பாக இருப்பதால் தான் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்கலையா என முரளியிடம் கேட்கும் அந்த காட்சி, தான் எப்பேர்ப்பட்ட நடிப்பை வெளிப்படுத்துபவன் என்பதை வடிவேலு நிரூபித்தார்.
- வாய் பேச முடியாத ராஜேஸ்வரி, தியேட்டரில் சரஸ்வதி சபதம் படம் பார்ப்பார். அதில் வாய் பேச முடியாத சிவாஜியை சரஸ்வதி பேச வைக்கும் காட்சியில் மொத்த மக்களும் அமைதியாக இருக்க, அவர் மட்டும் கைத்தட்டுவார். இந்த ஒரு காட்சியே மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறையையும், துயரத்தையும் மிகச்சரியாக சேரன் பதிவு செய்ததற்கான சாட்சியாகும்.
- படத்தில் முரளி பெயர் மட்டும் மாணிக்கம் அல்ல.. அவரின் நடிப்பும் கூட மாணிக்கம் தான். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒவ்வொரு காட்சியும் நம் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்
- தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்தது. சிங்குசா சிங்குசா, தஞ்சாவூரு மண்ணெடுத்து, ஊனம் ஊனம் என வெரைட்டியாக கொடுத்திருந்தார்.
- இதில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூரில் நீண்ட ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த தமிழரான எஸ்.ஆர்.நாதனுக்கு ஃபேவரைட் பாடலாகும். அவரது மறைவின்போது, நாதனின் விருப்பத்தின் பேரில் பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது.
- பொற்காலம் படத்துக்காக சேரனுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதும், மீனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.