`விக்ரம் படம் தெரியும்.. கமல் படம் தெரியாது!’ .. அதிர்ச்சி கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.. என்ன ஆச்சு இவருக்கு என்கிறீர்களா?
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, `நடிகர் விக்ரம் நடிக்கும் `கோப்ரா’ படம் குறித்து தெரியும்.. கமல் சார் நடித்துள்ள `விக்ரம்’ படம் பற்றி தெரியாது’ என்று கூறியுள்ளார்.
சென்னையில் அர்மோரா சரும சிகிச்சை மருத்துவமனையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, `நடிகர் விக்ரம் நடிக்கும் `கோப்ரா’ படத்தில் நடித்திருக்கிறேன்.. அதைக் குறித்து தெரியும்.. கமல் சார் நடித்துள்ள `விக்ரம்’ படம் பற்றி தெரியாது’ என்று கூறியுள்ளார்.
சென்னையில் அர்மோரா சரும சிகிச்சை மருத்துவமனையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் `விக்ரம்’ படத்தின் அப்டேட் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், `விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன்.. நடிகர் விக்ரம் நடிக்கும் `கோப்ரா’ படத்தில் நடித்திருக்கிறேன்.. அதைக் குறித்து தெரியும்.. கமல் சார் நடித்துள்ள `விக்ரம்’ படம் பற்றி தெரியாது.. நாங்களும் உங்களைப் போலவே காத்திருக்கிறோம்.. பணியாற்றினால்தான் படம் பற்றி தெரியும்.. அப்போதும் சொல்ல மாட்டேன்!’ எனத் தெரிவித்தார்.
மேக்கப் குறித்து தன் அனுபவங்களைப் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், `நான் கதாநாயகிகள் மேக்கப் போடுவதைப் பார்த்ததில்லை. கதாநாயகர்களைப் பார்த்திருக்கிறேன்.. கமல் சாருக்குப் ப்ராஸ்தெடிக் மேக்கப் போட்டு, படப்பிடிப்பு முடிந்த பிறகு அதனை முகத்தில் இருந்து நீக்கும் போது, துரு பிடித்த பிளேட் பயன்படுத்தி சவரம் செய்ததைப்போல முகம் முழுவதும் ஆங்காங்கே ரத்தம் வந்து, காயம் உருவாகும். மறுநாள் மேக்கப்பிற்காக அதன் மீது வேறு பூச்சு போடும் போது அவருக்கு பயங்கரமாக எரியும்.. வலியால் கத்துவார்.. ப்ராஸ்தெடிக் மேக்கப் போடுவதற்காக பயன்படுத்தப்படும் பசை விலை அதிகம் கொண்டது. அதனை 100 சதவிகித ஆல்கஹால் பயன்படுத்தி முகத்தில் இருந்து நீக்குவதைப் பார்த்து இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `இப்போது கோடம்பாக்கத்தில் முன்பிருந்ததைப் போல இல்லாமல், வெளிநாட்டுத் தயாரிப்புகள் களமிறங்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் விலை மதிப்புமிக்க மேக்கப் பொருள்களும் சந்தையில் கிடைக்கத் தொடங்கி விட்டன.. ஆர்மோரா மருத்துவமனை இந்தத் தொழிலிலும் இறங்குவதாக இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், `நான் பணியாற்றிய படங்களில் பயன்படுத்தப்பட்ட ப்ராஸ்தெடிக் மேக்கப் பொருள்கள் போலியானவை.. இப்போது இயற்கையில் உருவாக்கப்பட்ட மேக்கப் பொருள்களும், ப்ராஸ்தெடிக் பொருள்களும் கிடைக்கின்றன.. அவற்றோடு ஒப்பிடும்போது நான் பயன்படுத்தியவற்றைப் பேச முடியாது.. ஏனெனில் சருமம் என்பது அனைவருக்கும் முக்கியமானது.. அதனைப் பாதுகாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.. தற்போது நிறைய சரும சிகிச்சைக்கான மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன.. சருமம் கெடுவதற்கு உணவுப் பழக்கங்கள், வெயில், மழை என மாறி மாறி வரும் காலநிலை ஆகியவை இருப்பதாலும் சரும சிகிச்சை மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடிய சூழல் அதிகளவில் உருவாகியுள்ளது. சற்றே பண வசதி படைத்தவர்களும் தங்கள் சருமத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ள இதுபோன்ற சரும சிகிச்சை நிலையங்களுக்கு வருகின்றனர்.. சருமத்தைப் பாதுகாக்க நிறைய மருந்துகள், க்ரீம்கள், சிகிச்சைகள் இருக்கின்றன’ என்று கூறினார்.