2007 மீண்டும் திரும்புகிறதா? 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைப்பார்களா ரஜினி, விஜய், அஜித், சூர்யா?
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினி, விஜய், அஜித் மற்றும் சூர்யா திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் இந்த படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக உலா வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களைப் போல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சூர்யா.
காத்திருக்கும் உச்சநட்சத்திரங்களின் படங்கள்:
நடப்பாண்டான 2024ல் இதுவரை தமிழில் வெளியான எந்த படமும் இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. கடந்த 8 மாதங்களாக வௌியான படங்கள் வெற்றி, தோல்வி என கலவையாக கோலிவுட்டை நகர்த்திச் சென்றாலும் இதுவரை வெளியான எந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை.
ஆனால், அடுத்த நான்கு மாதங்களில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களான வேட்டையன், தி கோட், விடாமுயற்சி, கங்குவா வெளியாக இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், விடாமுயற்சி மட்டும் வெளியீடு தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், தீபாவளிக்கு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
சிவாஜி, போக்கிரி:
இவர்கள் நடிப்பில் ஒரே ஆண்டில் பல படங்கள் வெளியானாலும் 2007ம் ஆண்டு இவர்கள் நான்கு பேருக்கும் ஒரு மறக்க முடியாத வெற்றி ஆண்டாக அமைந்தது. சந்திரமுகி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு முற்றிலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி படம் வெளியானது. ஷங்கர் இயக்கிய அந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்று சூப்பர்ஸ்டார் என்றும் சூப்பர்ஸ்டார் என்று அனைவருக்கும் உணர்த்தியது.
நடிகர் விஜய்யின் திரை வாழ்வில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் போக்கிரி. இந்த படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி நடிகர் விஜய்க்கு புதியதாக லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியது. பிரபுதேவா இயக்கிய இந்த படம் நடிகர் விஜய்யை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன் வசூலையும் வாரிக் குவித்தது.
கம்பேக் தந்த அஜித், வசூலை குவித்த சூர்யா:
ஆழ்வார், கிரீடம் என அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டிருந்த அஜித்தின் திரை வாழ்க்கையும் மீண்டும் டாப் கியருக்கு கொண்டு சென்ற திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் முழுக்க முழுக்க ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் அஜித் நடித்த பில்லா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் டான் என்றால் அது அஜித் மட்டுமே எனும் சொல்லும் அளவிற்கு அவருக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் திரை வாழ்க்கை மீண்டும் உச்சத்திற்கு செல்லத் தொடங்கியது.
வளர்ந்து வரும் நடிகராக பன்முக திறன் கொண்ட நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சூர்யா ஆறு, சில்லுனு ஒரு காதல் என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெளியானது வேல். முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியில் உருவான இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருப்பார்.
மீண்டும் திரும்புமா 2007?
இந்த நான்கு படங்களுமே அந்தந்த படங்களின் தயாரிப்புச் செலவுகளை காட்டிலும் பல மடங்கு அதிகளவு வசூலை வாரிக்குவித்தது. அதன்பின்பு, இவர்கள் நான்கு பேர் நடித்த படங்களும் ஒரே ஆண்டில் வெளியானாலும் நான்கு பேரின் படங்களும் ஒன்றாக வெற்றி பெறவில்லை. 2007 போலவே நடப்பாண்டிலும் இவர்கள் நான்கு பேர் நடிப்பிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள நான்கு பெயரின் படங்களும் வெளியாக இருப்பதால் 2007ம் ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் நான்கு பேரின் படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.