படம் ரிலீஸ் இல்லையா? கோபத்தில் தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்.! வீடியோ வெளியிட்ட நடிகர்!
கன்னட மொழியில் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், நடிகை மடோன்னா செபாஸ்டியன் முதலானோர் நடித்த `கொடிகொப்பா 3’ படம் வெளியாகாததால், பல ரசிகர்கள் வன்முறையில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட மொழியில் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், நடிகை மடோன்னா செபாஸ்டியன் முதலானோர் நடித்த `கொடிகொப்பா 3’ திரைப்படம் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் வெளியாகும் எனத் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அக்டோபர் 15 அன்றும் இந்தப் படம் வெளியாகப் போவதில்லை. இணையத்தில் வலம்வரும் வீடியோ ஒன்றில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, இரு கைகளையும் கூப்பி, கிச்சா சுதீப், அவரது ரசிகர்கள் ஆகியோருக்குப் படத்தின் வெளியீடு தாமதாகி வருவதாகவும், அதற்குத் தான் காரணம் இல்லை என்றும் பேசியுள்ளார். படம் வெளியாகாததால், பல ரசிகர்கள் வன்முறையில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரா பகுதியில், சில ரசிகர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதோடு, ட்ரீம்லேண்ட் திரையரங்கத்தின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டது. கிச்சா சுதீப் நடித்த `கொடிகொப்பா 3’ படத்தின் டிக்கெட்கள் வழங்கப்படாததால் அவரது ரசிகர்கள் இவ்வாறு வன்முறையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே, நடிகர் கிச்சா சுதீப் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடவோ, திரையரங்குகளைத் தாக்கவோ கூடாது எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், `ஏற்கனவே திரையரங்கங்களில் குழுமி இருப்போருக்கு, சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போவதை அறிவிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. படம் வெளியாகாமல் போனதற்கு, நான் எனது நெஞ்சார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். திரையரங்கங்களுக்கும் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
`இது அரிதாக நிகழ்ந்திருக்கிறது. இதனைப் புரிந்துகொண்டு, அனைவரும் அமைதி காப்பது எனக்கு மிகப்பெரிய பலமாக அமையும். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தைப் பெரிய திரைகளில் கொண்டு வருவது குறித்து நானும் மகிழ்வோடு எதிர்பார்த்திருந்தேன். திரையிடப்படும் நேரம் குறித்த பிரச்னைகள் சரியானவுடன், எனது ட்விட்டரில் இதுகுறித்த தகவல்களை வெளியிடுவேன். அதுவரை, யாரும் தங்களுக்கோ, பிறருக்கோ, திரையரங்குகளுக்கோ எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்’ என்றும் நடிகர் கிச்சா சுதீப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியுள்ள நடிகர் கிச்சா சுதீப் எதிர்காலத்தின் தனது திரைப்படங்களின் வெளியீட்டில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தனது தனிப்பட்ட பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், `கொடிகொப்பா 3’ படத்திற்கான விளம்பரப் பணிகள் தொடங்கின. அறிமுக இயக்குநர் சிவா கார்த்திக்குடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் நடிகர் கிச்சா சுதீப்.