தொடரட்டும் நல்லாட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து பாராட்டு!
முதலமைச்சர் ஸ்டாலின், 4 குழந்தைகளையும் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார். இவர்கள் 4 பேரும் இனி நம்முடைய அரசின் குழந்தைகள் எனவும், அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் என தெரிவித்திருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு தேவையான உதவியை அரசு மேற்கொள்ளும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் உள்ளது. இங்கு கூலித்தொழிலாளில் கமலக்கண்ணன் என்பவர் கடந்த நவம்பர் 14ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அவரின் மனைவி வசந்தா உயிரிழந்தார். இப்படியான சூழலில் பெற்றோர் இருவரும் உயிரிழந்ததால் அவர்களது 4 குழந்தைகளும் செய்வதறியாது தவித்தனர். கமலக்கண்ணன் இறந்த நிலையில் அவரது இறுதிச் சடங்குகளை நடத்தகூட பணம் இன்றி தவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதி சடங்குகளை 4 குழந்தைகளும் மேற்கொள்ள உதவி செய்தனர்.
கண நேரத்தில் உதவிய தமிழக அரசு
கமலக்கண்ணன் வசந்தா தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் லாவண்யா கல்விக்கட்டணம் செலுத்த முடியாததால் பொறியியல் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். அதேபோல் 10 ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா, 8ம் வகுப்பு படித்து வந்த ரீனா ஆகியோரும் படிப்பை கைவிட்டனர். மகன் அபினேஷ் மட்டும் பூட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக கமலக்கண்ணன் கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனால் குடும்பத்தினர் வருமானம் இல்லாமல் வறுமை நிலைக்கு சென்றனர். இப்படியான நிலையில் தாயும், தந்தையும் இழந்து பரிதவிக்கும் குழந்தைகள் தொடர்பான செய்தி ஊடகத்தில் வெளியானது. இதனை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 குழந்தைகளையும் தொடர்பு கொண்டு போனில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் 4 பேரும் இனி நம்முடைய அரசின் குழந்தைகள் எனவும், அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் என தெரிவித்திருந்தார்.
வைரமுத்து பாராட்டு
சங்கராபுரம் அருகே
— வைரமுத்து (@Vairamuthu) November 18, 2025
தாய் தந்தையரை இழந்துபோன
நான்கு குழந்தைகளை
அரசே ஏற்றுக்கொள்ளும்
என்ற அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள
சமூக மதிப்பை
மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது
அரசாங்கம் என்பது
ஒரு நிறுவனமே ஆயினும்
அது ஈரமும் இதயமும் அற்ற
எந்திரமல்ல
ஒரு குடும்பத்திற்கான…
இந்நிலையில் முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை வைரமுத்து பாராட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும்என்ற அறிவிப்புமுதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ளசமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது
அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும் அது ஈரமும் இதயமும் அற்ற எந்திரமல்ல. ஒரு குடும்பத்திற்கான குணக்கூறுகள் உடையது என்பதற்குசாட்சி சொல்லும் ஆட்சியாளராகமுதல்வர் சிறந்து நிற்கிறார்; பால் நினைந்தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து நிற்கிறார்
"காற்றடித்தால்,அவன் வீடாவான்; கடுமழையில் அவன் குடையாவான்; ஆற்றாதழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்" என்று கண்ணனுக்கு எழுதிய பாட்டு வரிகள் முதல்வர் என்ற அண்ணனுக்கும் பொருந்தும். மக்கள் இந்த அறச்செயலை மறக்க மாட்டார்கள்; நெகிழ்ந்து புகழ்ந்து மகிழ்கிறார்கள். தொடரட்டும் நல்லாட்சி” என தெரிவித்துள்ளார்.





















