விராட் - அனுஷ்காவிற்கு அண்டை வீட்டார் ஆகும் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப்; டிசம்பரில் திருமணம்!
சர்தார் உதம் திரைப்படத்தின் வெற்றிக்களிப்பில் கத்ரீனா கைஃபை திருமணம் செய்துகொள்ளப்போகும் விக்கி கௌஷல் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் பிளாட்டில் குடியேற இருக்கிறார்களாம்.
நடிகர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவ ஆரம்பித்ததில் இருந்து பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறினர். தீபாவளி தினத்தன்று மும்பையில் உள்ள இயக்குனர் கபீர் கானின் இல்லத்தில் இருவரும் ரோகா விழாவை நடத்தியதாக கூறப்படுகிறது. ரோகா விழா என்பது வட இந்தியாவில் நடத்தப்படும் ஒரு வித நிச்சயதார்த்த நிகழ்வு ஆகும். தற்போது, திருமணம் செய்துகொள்வதற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு விக்கி கௌஷல் சரியான திருமண வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘சர்தார் உதம்’ திரைப்படத்தின் நடிகர் விக்கி கௌஷல் ஜூஹூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்காக பெரும் தொகையை செலுத்தி உள்ளார். அந்த வீட்டிற்கு சென்றதும் இந்த புதிய ஜோடி விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் அண்டை வீட்டாராக மாறுவார்கள். விராட் மற்றும் அனுஷ்கா ஒரே கட்டிடத்தில் இரண்டு தளங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அவர்களின் ரோகா விழா தம்பதியினரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நெருக்கமான விவகாரமாக நடந்து முடிந்தது. விழாவில் கத்ரீனாவின் தாயார் சுசானே டர்குவோட், அவரது சகோதரி இசபெல் கைஃப் மற்றும் விக்கியின் பெற்றோர் ஷாம் கௌஷல் மற்றும் வீணா கௌஷல் மற்றும் சகோதரர் சன்னி கௌஷல் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃபின் திருமண விழாக்கள் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை ராஜஸ்தானின் ரன்தம்போர் தேசிய பூங்காவிலிருந்து 30 நிமிடங்கள் தொலைவில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பார்வாரா என்ற ரிசார்ட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆன சப்யாசாச்சி தயார் செய்யும் ஆடைகளை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கத்ரீனா தனது திருமணத்திற்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளுக்கும் நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. தற்போது அவர் அக்ஷய் குமார் மற்றும் ரோஹித் ஷெட்டியுடன் சூரியவன்ஷி படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், விக்கி தற்போது ‘சர்தார் உதம்’ படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கிறார். விக்கி கௌஷல் சந்தேகத்திற்கு இடமின்றி பாலிவுட்டில் தற்போது ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான `சர்தார் உத்தம்' (Sardar Udham) வெற்றி அதனை உரக்கச் சொல்லி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் 1971 போரின் போது இந்திய ராணுவத்தின் தலைவராக இருந்த சாம் மானெக்ஷாவின் வாழ்க்கை வரலாற்றில் மேக்னா குல்சாரின் வரவிருக்கும் திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ல் ஆரம்பித்த அவரின் திரை வாழ்க்கை குறுகிய ஆண்டுகளில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருப்பதற்கு முழுமுதற் காரணம் அவர் மட்டுமே. பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட விக்கி கௌஷலின் தந்தை ஷாம் கெளஷல் ஓர் இயக்குநர். அதிரடி - ஆக்ஷன் படங்களை இயக்கி புகழடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.