Suriya 44 : வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் அழைத்துவரப்பட்டார்களா? சூர்யாவுக்கு சிக்கல்?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி பணியாற்றியதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது
சூர்யா 44
ஒரு பக்கம் கங்குவா ரிலீஸூக்காக காத்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44 -வது படமாக உருவாகும் இப்படத்தில் ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , பூஜா ஹெக்டே , கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்கள் முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக மாலத்தீவில் நடைபெற்ற படப்பிடிப்பு பின் அடுத்தகட்டமாக நீலகிரியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் காயம்பட்ட சூர்யா
இதனிடையில் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. நீலகிரியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர். சூர்யாவுக்கு ஏற்பட்டது ஒரு சின்ன காயம்தான் என்றும் ஒரு சில நாட்களில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டது. நீலகிரியில் படப்பிடிப்பு தொடர்ந்தது
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றியதால் பிரச்சனை
நீலகிரியில் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பணியாற்றியிருப்பதாக படக்குழு மீது புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நீலகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இப்படத்திற்கு பிரச்சனைகள் வருவது படப்பிடிப்பில் தாமதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் , யோகி பாபு , கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.
கங்குவா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை , கோவா , கேரளா , கொடைக்கானல் , ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சுமார் 350 கோடி பொருட்செலவில் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் கங்குவா.தமிழ் , இந்தி , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது