(Source: ECI/ABP News/ABP Majha)
Karthigai Deepam Songs: 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ ... தமிழ் சினிமாவை அலங்கரித்த திருக்கார்த்திகை பாடல்கள்..!
Karthigai Deepam: கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இடம் பெற்ற கார்த்திகை தீப பாடல்கள் பற்றி காணலாம்.
கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இடம் பெற்ற கார்த்திகை தீப பாடல்கள் பற்றி காணலாம்.
வானத்தைப் போல - ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’
இன்று அனேகமாக எல்லோருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம் பெறும் பாடல் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ தான். விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அழியாது.
மனசெல்லாம் - ‘கையில் தீபம் ஏந்தி’
ஸ்ரீகாந்த் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான மனசெல்லாம் திரைப்படத்தில் ‘கையில் தீபம் ஏந்தி’என்ற பாடல் இடம் பெற்றது. இளையராஜா இசையமைத்த இப்பாடலை சாதனா சர்க்கம் பாடியிருப்பார்.
தேவதை - 'தீபங்கள் பேசும்'
1997 ஆம் ஆண்டு வினீத் மற்றும் கீர்த்தி ரெட்டி நடிப்பில் வெளியான தேவதை படத்தில் ‘தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்’ என்ற பாடல் இடம் பெற்றது. நாசர் எழுதி இயக்கிய இப்படத்தில் அந்த பாடல் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி. சரண், சந்தியா மற்றும் கே.பி. மோகன் ஆகியோர் பாடியிருந்தார்கள்
தேவ ராகம் - ‘அழகிய கார்த்திகை தீபங்கள்’
ஸ்ரீதேவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‘தேவராகம்’ படத்தில் "அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்” பாடல் இடம் பெற்றிருந்தது. எம்.எம் கீரவாணியின் இசையில் கே. எஸ். சித்ரா பாடிய இப்பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
சாமுண்டி - “ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம்”
சரத்குமார், கனகா நடிப்பில் வெளியான சாமுண்டி படத்தில் ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம் என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இப்பாடலை கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார்.
சூர்யவம்சம் - 'நட்சத்திர ஜன்னல்'
சரத்குமார், தேவயானி, ராதிகா நடிப்பில் வெளியாகி இன்றைக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் ‘சூர்யவம்சம்’. இப்படத்தில் இடம் பெற்ற நட்சத்திர ஜன்னல் பாடல் கார்த்திகை தீபத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தது.
சந்தித்த வேளை - ‘பெண் கிளியே’
கார்த்திக், ரோஜா, கௌசல்யா நடித்த சந்தித்த வேளை படத்தில் ‘பெண் கிளியே’ பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலும் கார்த்திகை தீப திருவிழா பின்னணியில் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்
வீரா - 'மலைக் கோயில் வாசலில்’
ரஜினிகாந்த், மீனா, ரோஜா, ஜனகராஜ், செந்தில் உள்ளிட்டோர் நடித்த வீரா திரைப்படத்தில் ஸ்வர்ணலதா குரலில் இடம்பெற்ற "மலை கோவில் வாசலில்" பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.