14 Years of Paiya: மீண்டு(ம்) வாங்க லிங்குசாமி.. 14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் “பையா”!
14 Years of Paiya: பார்த்தவுடன் காதல், அதே பெண்ணுடன் கார் பயணம், ஆபத்து என வரும் போது காப்பாற்றுவது, கடைசி வரை காதலை சொல்லாமல் இருப்பது என படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பார்கள்.
நடிகர் கார்த்தி நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற பையா படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்வதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவின் பேமிலி ஆடியன்ஸ் மத்தியின் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் லிங்குசாமி. ஆனால் தொடர்ந்து குடும்ப கதைகளை வழங்காமல் கமர்ஷியல் தான் தனது ஃபார்முலா என தனி ரூட் பிடித்து சென்றார். விளைவாக ரன், சண்டகோழி, பீமா என அடுத்தடுத்து ஆக்ஷன் மசாலாக்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கி மாஸ் காட்டினார். இப்படியான நிலையில் தான் 2010 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து “பையா” படத்தை இயக்கினார்.
2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான கார்த்திக்கு 2010 ஆம் ஆண்டில் தான் இரண்டாவதாக ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது. இந்த 2 படங்களும் கார்த்தியை கிராமம் மற்றும் சேரி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கேரக்டராக காட்டியது. இந்த நிலையில் தான் அதே ஆண்டில் ஏப்ரல் 2 ஆம் தேதி பையா படம் வந்தது. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மாடர்ன் லுக்கில் அசத்தினார்.
Most satisfied climax❣️#Paiya pic.twitter.com/Cx9jlwmSjA
— Arun Neo Ap (@StafRaven39929) April 1, 2024
இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்த நிலையில் ஜெகன், மிலிந்த சோமன், சோனியா தீப்தி என பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க சாலை பயணத்தை மையமாக வைத்து பக்காவான ஆக்ஷன் பேக்கேஜ் ஒன்றை வழங்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் லிங்குசாமி. எந்த ஒரு இடத்திலும் சற்றும் போரடிக்காத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
பார்த்தவுடன் காதல், அதே பெண்ணுடன் கார் பயணம், ஆபத்து என வரும் போது காப்பாற்றுவது, கடைசி வரை காதலை சொல்லாமல் இருப்பது என படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பார்கள். யுவனின் இசையில் படத்தின் எல்லாம் பாடல்களும் சூப்பர்ஹிட்டாகின. துளி துளி மழையாய், அடடா மழைடா, சுத்துதே சுத்துதே, பூங்காற்றே, ஏதோ ஒன்று என்னை தாக்க என அத்தனையும் தனித்தனி வெரைட்டியாக விருந்து படைத்தனர். லிங்குசாமி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை சொந்தமாக தயாரித்திருந்தார்.
இப்படம் தான் அவரின் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த கடைசிப் படமாகும். அதன்பிறகு 14 ஆண்டுகளில் லிங்குசாமி படம் இயக்கியிருந்தாலும் எதுவும் பையா அளவுக்கு வரவில்லை என ரசிகர்கள் இன்றும் தெரிவித்து வருகின்றனர். பையா படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.