Happy Birthday Kangana Ranaut: கலையில் திறமை... வார்த்தைகளில் சர்ச்சை.. பரபர நாயகி கங்கனாவின் பிறந்தநாள் இன்று!
கருத்துகளை சொல்வது, வேண்டுமென்றே சர்ச்சைகளை கிளப்புவது என தன்னை எப்போதும் சர்ச்சை வளையத்துக்குள் வைத்திருப்பதே அவருக்கு பிடிக்கும்.
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுடில் ‘குயின்’ ‘தனு வெட்ஸ் மனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் செண்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்பே என் அன்பே என்ற பாடலில்தான் நம் தமிழ் சினிமா சமூகத்துக்கு அறிமுகமாக இருந்தாலும் இந்தப்பெண்ணா அது என்பதுபோல பாலிவுட்டில் அதிகம் கவனிக்க வைத்தவர் கங்கனா ரனாவத். நடிப்புக்கு அடையாளமாக பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவியில் கவனிக்க வைத்தவர். கலையில் திறமை, வார்த்தைகளில் சர்ச்சை என என்றுமே சர்ச்சை நாயகியாக வலம் வரும் கங்கனாவுக்கு இன்று 35வது பிறந்ததினம்.
துணிச்சலான கதையம்சங்களை கையில் எடுத்து நடிப்பது, வெறும் கிளாமர் ஆர்டிஸ்டாக வந்து போகாமல் நடிப்பில்தான் இருக்கிறது அனைத்துமே என பாலிவுட்டையே பரபரக்க வைத்தவர் கங்கனா. அதேபோல் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லாதவர். சினிமாவில் கங்கனாவின் வேட்கையைம், வெற்றியையும், உழைப்பையும் மெச்சும் பலரும் அவரின் கருத்துகளில் முரண்பட்டே நிற்பர். அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு கருத்துகளை சொல்வது, வேண்டுமென்றே சர்ச்சைகளை கிளப்புவது என தன்னை எப்போதும் சர்ச்சை வளையத்துக்குள் வைத்திருப்பதே அவருக்கு பிடிக்கும்.
அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பார்கள். அப்படிதான் கங்கனாவும். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், பாலிவுட் சினிமாவின் வாரிசு அரசியலை அக்குஅக்காக பிரித்தவர், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சனங்களை சம்பாதித்துக்கொண்டார். மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகான வன்முறை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிரந்தரமாக முடக்கியது. இப்படி சர்ச்சைகள் ஒரு பக்கம் கலையில் திறமை ஒரு பக்கம் என வாழ்ந்துகொண்டிருக்கும் கங்கனா ஒருமுறை தன்னுடைய தொடக்கக் காலம் குறித்து பதிவிட்ட ட்வீட் உண்மையாகவே நெகிழ்ச்சியானது.
''நான் பெண்ணாக பிறந்ததால் தேவையற்றவளாக கருதப்பட்டேன். ஆனால், இன்று நான் திறமையான, சிறந்த கலைஞர்களுடனும், படைப்பாளர்களுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் பணியாற்றுகிறேன். நான் என்னுடைய பணியை நேசிக்கிறேன். பணத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்ல. உலகின் சிறந்தவர்கள் என்னை பார்க்கும்போதும், அவர்கள் உன்னால் மட்டும்தான் முடியும் என்று சொல்வதாலும் என் பணியை நேசிக்கிறேன். நான் தேவையில்லாதவளாக கூட இருந்திருக்கலாம். ஆனால், நான் இப்போது தேவைப்படுகிறேன். மிகவும் தேவைப்படுகிறேன்” என்றார்.
View this post on Instagram
பாலிவுட் போன்ற மிகப்பெரிய கடலில் குதித்து தனக்கென தனி இடத்தை பிடிப்பது உள்ளதுபடியே பாராட்டப்பட வேண்டியது. தன்னைத்தானே செதுக்கி கலையுலகில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் கங்கனாவின் கருத்துகளும், அரசியல் பார்வைகளும் சில நேரம் சர்ச்சைகளுக்கு உள்ளாவதும் மறுப்பதற்கில்லை. சினிமாவில் தனி ஒருத்தியாக களமிறங்கி சாதித்த கங்கனா விரைவில் அரசியலில் தன் திறமையைக் காட்டுவார் என அவரது ரசிகர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதேவேளையில் கங்கனா மாதிரியான மிகவும் திறமையான கலை வாரிசுகள் அரசியலில் களமிறங்கி அடையாளங்களை அழிப்பது ஏனோ என சிலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
அரசியலா, கலையா என்ற குழப்பத்திலேயே பயணிக்கும் கங்கனா விரைவில் ஒரு முடிவை எடுப்பார். அப்போது அவருக்கான ரசிகர்கள் சரியாக தங்களை இணைத்துக்கொள்ளவும், அவரிடம் இருந்து விலகிக் கொள்ளவும் செய்வார்கள்.