Kamal Haasan: என்ன சொல்றீங்க?.. கமல்- ஹெச்.வினோத் படம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு!
துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.
இயக்குநர் ஹெ.வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரெடியான கமல்
தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அரசியல், சின்னத்திரை, பெரிய திரை என 69 வயதிலும் மனிதர் பம்பரமாக சுழன்று வருகிறார். இப்படியான நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ரம் படம் வெளியானது. இந்த படத்தை தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் கமலே தயாரித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் ரூ.400 கோடி வசூல் செய்தது.
இப்படியான நிலையில் கமல்ஹாசன் மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதேசமயம் விக்ரம் பட வெற்றியால் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்தியேனை வைத்தும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசனை வைத்து படங்களை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
மேலும் தனது நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2, மணி ரத்னம் நடிப்பில் தக் லைஃப், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கவுள்ள அறிமுக படம் ஆகியவற்றில் ஹீரோவாகவும் , பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாகவும் கலக்க தயாராகி வருகிறார்.
ஹெச்.வினோத் படம் என்னாச்சு?
துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதுதொடர்பான அறிமுக வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை பேசி வரும் ஹெச்.வினோத் இதில் விவசாயிகள் பிரச்சினையை பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்திருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், தக் லைஃப் படம், அன்பறிவ் மாஸ்டர்ஸ் படம் ஆகிய படங்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த இணையவாசிகள் அப்ப ஹெச்.வினோத் கைவிடப்பட்டதா என்ற கேள்வியெழுப்பி வந்தனர். இந்த படத்துக்காக ஒருவருடம் மேலாக காத்திருந்த ஹெச்.வினோத் அடுத்ததாக யோகிபாபு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.