Kamal Srividya Love: ஸ்ரீவித்யா என் அன்புக்காதலி, திருமணத்தில் இந்த உறவு முடியவில்லை: கமல்ஹாசன் உருக்கமான பேச்சு!
”மறுக்க முடியாத வகையில் கடைசிவரை எங்கள் இருவருக்கும் இடையில் அந்தக் காதல் இருந்தது” - ஸ்ரீவித்யா பற்றி கமல்ஹாசன்!
கமல்ஹாசன் - ஸ்ரீவித்யா
தமிழ் சினிமாவில் காதலையும் கமல்ஹாசனையும் (Kamal Haasan) பிரித்தே பார்க்க முடியாது. ஒரே நேரத்தில் 7 பெண்களை கமல் காதலித்து வந்ததாக நடிகை குட்டி பத்மினி ஒருமுறை தெரிவித்திருந்தார். ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி உள்ளிட்ட நடிகைகளை கமல் காதலித்திருக்கிறார்.
கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யாவுக்கு (Srividya) இடையில் இருந்த காதல் கதையை மையமாக வைத்து ‘திறக்காத’ என்கிற மலையாள திரைப்படம்கூட வெளியாகி உள்ளது. காதல், ஏமாற்றம், கோபம் என எல்லாம் மறைந்து தீரா காதல் என இந்தக் காதலில் உறவில் எல்லாவிதமான உணர்ச்சிகளும் கலந்திருக்கின்றன.
தனது குடும்ப சூழல் காரணமாக 13 வயதில் திரைக்கு நடிக்க வந்த ஸ்ரீவித்யா, சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் வெளியான ‘அன்னை வேளாங்கன்னி’ படத்தில் கமல் மற்றும் ஸ்ரீவித்யா இணைந்து நடித்திருந்தார்கள்.
தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள், உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டார்கள். கமல்மீது ஸ்ரீவித்யா தீராத காதல் வைத்திருந்ததாக நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த சமயத்தில் நடிகை வாணி கணபதியையும் காதலித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். மேலும் வானி கணபதியை திருமணமும் செய்துகொண்டார் அவர். இந்த கல்யாணத்தால் ஸ்ரீவித்யா மனமுடைந்து போனதாக நடிகை குட்டி பத்மினி தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்த இயக்குநர் பரதனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. இந்த காதலும் தோல்வியில் முடிய ஜார்ஜ் தாம்சன் என்கிற உதவி இயக்குநரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. இந்த திருமணத்திற்காக தனது குடும்பத்தில் எதிர்ப்பையும் மீறி கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்துகொண்டார்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஸ்ரீவித்யாவின் மூன்று காதல்களும் தோல்வியில் முடிந்தன. ஜார்ஜ் தாம்சனிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற ஸ்ரீவித்யா சென்னையை விட்டு திருவனந்தபுரத்திற்கு குடிபோனார். அங்கு ஸ்ரீவித்யாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. 2006ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
ஸ்ரீவித்யா பற்றி கமல்ஹாசன்
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவைப் பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. “அபூர்வ ராகங்கள் படம் எடுக்கும் போது எனக்கு 19 வயது. இந்தப் படத்தில் வந்த பாத்திரங்கள் போக அதுவே காதலாக மலர்ந்ததா என்று தெரியவில்லை.
ஸ்ரீவித்யா என் அன்புக் காதலி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தக் காதல் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மறுக்க முடியாமல் எங்கள் இருவருக்கும் இடையில் அந்தக் காதல் கடைசிவரை இருந்தது” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவும், கமல் - ஸ்ரீவித்யா காதல் கதையும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.