K.R.Vijaya: 60களில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய நடிகை: புடவை கட்டியபடி தூள் கிளப்பிய கே.ஆர்.விஜயா!
K.R. Vijaya : 70ஸ் ஹீரோயின் கே.ஆர். விஜயா ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிப்பின் மீது தீராத தாகம் ஆர்வம் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் நடிப்புத் துறையை தேர்ந்து எடுப்பார்கள். ஆனால் தந்தையின் விருப்பத்திற்காக நடிப்பு துறையில் அடியெடுத்து வைத்தாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற ஒரு உணர்வை கொடுத்த ஒரு நடிகை தான் கே.ஆர். விஜயா.
திரையுலக அறிமுகம் :
புன்னகை அரசி என போற்றப்பட்ட நடிகை கே.ஆர். விஜயா 60ஸ், 70ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கதயநாயகியாக நடித்திருந்தார். 1963ம் ஆண்டு வெளியான 'கற்பகம்' என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். கே.ஆர். விஜயா நடிப்பில் ஆண்டுக்கு 10 திரைப்படங்களாவது வெளியாகும்.
பக்தி படங்களில் கே.ஆர். விஜயா :
குடும்ப குத்துவிளக்காக குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த கே.ஆர்.விஜயாவை ரசிகர்கள் கொண்டாடினர். உச்சபட்ச நடிகையாக புகழின் உச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்ட கே.ஆர்.விஜயா கணவரின் ஆதரவுடன் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். அதே போல கடவுள் பக்தி படங்கள் என்றாலும், அதில் கடவுள் வேஷங்களுக்கு முதல் தேர்வாக கே.ஆர். விஜயா தான் இருந்தார். கதாநாயகியாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் சிறந்து விளங்கிய கே.ஆர். விஜயா தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
ஆனந்தம், அன்பே வா உள்ளிட்ட ஏராளமான தமிழ் சீரியல்களில் நடித்துள்ள கே.ஆர். விஜயா பல மலையாள மற்றும் தெலுங்கு தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாளிகாபுரம் : ஆபத்வாந்தவன் அய்யப்பன் என்ற மலையாள தொடரில் தேவகி அம்மா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 60 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கும் நடிகை கே.ஆர். விஜயாவின் அரிதான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கே.ஆர்.விஜயாவின் அரிய புகைப்படம் :
அன்றும் இன்றும் ஃபேவரட் பைக் என அனைவரும் கொண்டாடும் ஒரு பைக்காக இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்த பைக்கை இன்று பல பெண்களும் அசாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஆனால் ராயல் என்ஃபீல்டு பைக்கை 70களிலேயே ஓட்டி அசத்தியுள்ளார் நடிகை கே.ஆர். விஜயா. பைக்கில் அவர் உட்கார்ந்து இருப்பது போல் போஸ் கொடுத்து இருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.