17 years of Mozhi: பேசாமலே கவர்ந்த ஜோதிகா.. காலங்கள் பேசும் “மொழி” வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு!
17 years of Mozhi : தமிழ் சினிமாவில் ரம்மியமான ஒரு உணர்வை காலங்களை கடந்தும் கடத்திவிட ஒரு சில அற்புதமான படைப்புகளால் மட்டுமே முடியும். அப்படி ஒரு படைப்பு தான் மொழி.
தமிழ் சினிமா இன்று அதிரடியான கதைக்களம், திரில்லர் படங்கள், ஆக்ஷன் சீக்வன்ஸ் என நகர்ந்து வரும் சூழல் அமைதியான ஒரு திரைக்கதை என்பதை மிகவும் அரிதாக தான் பார்க்க முடியும். ஆனால் அதே தமிழ் சினிமாவில் ரம்மியமான ஒரு உணர்வை காலங்களை கடந்தும் கடத்திவிட ஒரு சில அற்புதமான படைப்புகளால் மட்டுமே முடியும். அப்படி ஓர் உன்னதமான உணர்வை கொடுத்து படத்தோடு பார்வையாளர்களை லயிக்க செய்த 'மொழி' திரைப்படம் இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மௌன மொழி பேசிய ஜோதிகா :
அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த 'மொழி' திரைப்படத்தை எந்த ஒரு பாகுபாடும் இன்றி ரசித்தனர். ஜோதிகா, பிருத்விராஜ் , பிரகாஷ்ராஜ், எம்.எஸ். பாஸ்கர், ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் கதாநாயகியை மையமாக வைத்து வெளியான படம். மொழி படத்தின் நினைவலைகளை உருண்டோட செய்தால் உடனே அனைவர் கண்முன்னால் வந்து நிற்பது ஜோதிகாவின் முகம் தான். மௌன மொழி பேசி படம் முழுக்க பார்வையாளர்களின் கவனத்தை தன்பக்கம் திரும்பியவர். கண்ணாலேயே அவர் கடத்திய உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது ஜோதிகாவின் முகபாவனைகள் அடடடே என்ன ஒரு நடிப்பு.
டஃப் கொடுத்த பிருத்விராஜ் :
வுமன் சென்ட்ரிக் திரைப்படம் என்றாலும் ஹீரோ பிருத்விராஜுக்கும் நடிக்க எக்கச்சக்கமான ஸ்கோப் அமைந்தது. அதை வெகு சிறப்பாக பயன்படுத்தி கொண்டு ஆப்லாஸ் அள்ளினார். காமெடி காட்சியிலும் சரி தன்னுடைய காதலை ஜோதிகா மறுத்த போதும் சரி சோகம் கலந்த அவரின் நடிப்பு எதார்த்தத்தையும் மிஞ்சியது.
பிரகாஷ்ராஜ் - எம்.எஸ். பாஸ்கர் :
ஆங்காங்கே வந்து போனாலும் பிரகாஷ்ராஜ் ஒன்னு லைன் வசனங்கள் நிச்சயம் ஒரு ஹைலைட். பிருத்விராஜ் உடன் ஹீரோயினை காட்டிலும் அதிகமாக படம் முழுக்க ட்ராவல் செய்தவர் பிரகாஷ்ராஜ் மட்டுமே. எம்.எஸ். பாஸ்கர் மற்றுமொரு டிக்ஸ்னரி. இப்படத்தில் இறந்து போன தனது மகனை நினைத்து மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பின் வேறு ஒரு பரிணாமத்தை வெளிப்படுத்தி இருந்தார். ராதாமோகன் இயக்கம் என்றாலே அதில் அழுத்தமான கதாபாத்திரங்கள் நிச்சயம் இருக்கும் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு மொழி திரைப்படம். வித்யாசகரின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏ 1 ரகம். காலங்களை கடந்தும் மௌன மொழி பெரிய ஜோதிகாவின் 'மொழி' திரைப்படம் இன்று மட்டும் அல்ல என்றுமே கொண்டாடப்படும்.