DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. இதன் காரணமாக திமுகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதை கேள்வி எழுப்பியுள்ளது.?

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 60 முதல் 90 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது புதிய பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றியை பெற்றது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டண வெற்றி பெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி தோல்வியை பெற்றது. அடுத்ததாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இதில் 18 தொகுதிகளில் வெற்றியை பெற்றது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ்
அடுத்த நடைபெற்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்கிற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அதற்கு ஏற்ப ராகுல் காந்தியின் நெருங்கிய தொடர்பில் உள்ள மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும், இது தான் இளைய தலைமுறையிடம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ராகுல் காந்தி ஓகே சொன்னதையடுத்து தான் திமுகவிடம் நெருக்கடி கொடுக்கும் வகையில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கேரளாவில் கூட்டணி ஆட்சி
இந்த சூழ்நிலையில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இன்றைய தினமும் கூட்டணி ஆட்சியை வழியுறுத்தி சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், கேரளாவின் UDF மாடல் கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம். முக்கியமானது —தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு “பை-பை” சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே. அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.
கேரளாவில் UDF மாடல்
IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன. இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.
UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில்.ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு,இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026 லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும். ஆட்சியில்பங்கு. தைபிறந்தால்வழிபிறக்கும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.





















