Jananayagan : விஜய்யின் 'ஜன நாயகன்' ரீமேக்கா? பகவந்த் கேசரி இயக்குனர் பரபரப்பு பதில்!
தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பகவந்த் கேசரி' இயக்குனர் அனில் ரவிபுடி, இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து, அது பாலையா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பகவந்த் கேசரி' இயக்குனர் அனில் ரவிபுடி, இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
முழுமையான ரீமேக் அல்ல
"ஜன நாயகன் படத்தை அப்படியே 'பகவந்த் கேசரி'யின் கார்பன் காப்பி என்று சொல்ல முடியாது" என்று அனில் ரவிபுடி தெரிவித்தார். டிரெய்லரில் சில காட்சிகள் ஒத்திருப்பதை ஒப்புக்கொண்ட அவர், படத்தின் ஆன்மா மற்றும் சில முக்கிய காட்சிகள் (தொடக்க மற்றும் இடைவேளை காட்சிகள்) மட்டும் எடுக்கப்பட்டு, தமிழ் நேட்டிவிட்டிக்கு ஏற்ப பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
அறிவியல் புனைகதை மற்றும் புதிய வில்லன் டிராக்
டிரெய்லர் குறித்து பேசிய அனில் ரவிபுடி, "இதில் வில்லன் கதாபாத்திரம் மற்றும் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக ரோபோக்கள் மற்றும் அறிவியல் புனைகதை (Sci-fi) கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்" என்று தெரிவித்தார்.
ரீமேக் என்ற முத்திரை ஏன் தவிர்க்கப்பட்டது?
ஒரு படம் மற்றொரு மொழியில் எடுக்கப்படும்போது அதை ரீமேக் என்று அழைப்பதில் உள்ள சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டினார். "ரீமேக் என்று சொன்னாலே எதிர்மறையான விமர்சனங்கள் எழும் என்பதால் படக்குழு அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், விஜய்யின் நடிப்பு இந்த படத்தின் உணர்ச்சிப்பூர்வமான கதைக்கு (Soul) மேலும் பலம் சேர்க்கும். 'கப்பர் சிங்' படம் போல இதுவும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள்
'ஜன நாயகன்' திரைப்படம் முதலில் இந்த மாதம் 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது சில சட்ட ரீதியான மற்றும் சென்சார் சிக்கல்களால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்குவது தொடர்பான ஒற்றை நீதிபதி உத்தரவை டிவிஷன் பெஞ்ச் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் முக்கிய படம் என்பதால், அனைத்து தடைகளையும் தாண்டி இப்படம் ஒரு 'பிளாக்பஸ்டர்' வெற்றியைப் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















