JanaNayagan: ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்.. திரண்ட விஜய் ரசிகர்கள்.. களைகட்டும் ஜனநாயகன் திருவிழா!
JanaNayagan Audio Launch: விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா அவருக்கு எப்படியான ஃபேர்வெல் பார்ட்டியாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு மலேசியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகளவிலான பயணிகள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படம்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 69வது படமாக உருவாகியுள்ளது ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதைத் தவிர பாபி தியோல், நரேன்,மமிதா பைஜூ, பிரியாமணி என பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் கால் பதித்துள்ள விஜய்க்கு ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்பதால் அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படத்தின் சில காட்சிகள் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் போலீசாக நடித்துள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் 3வது பாடலான “செல்ல மகளே” இன்று (டிசம்பர் 26) வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பது இன்னும் சிறப்பாகும்.
மலேசியா புறப்பட்ட ரசிகர்கள்
Immigration la yae evalavu kootam OMG #JanaNayaganAudioLaunch pic.twitter.com/FzwwO6QqqP
— Targaryen🐉 (@__Targaryen247_) December 25, 2025
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக அந்நாட்டு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்நிகழ்ச்சியை நடத்தினால் ரசிகர்களால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என கணிக்கப்பட்டதால் மலேசியாவுக்கு இந்நிகழ்ச்சி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜனநாயகன் இசை வெளியீட்டு அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் பலரும் எப்படியாவது இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விட வேண்டும் என மலேசியாவுக்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். திறந்தவெளி மைதானம் என்பதால் நிறைய ரசிகர்கள் பங்கேற்கவுள்ளார். மலேசியாவும் ஜனநாயகன் நிகழ்ச்சியால் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் பன்னாட்டு விமான நிலையங்களில் காலை முதல் மக்கள் மலேசியா செல்ல திரண்டு வந்துள்ளனர்.
குடியுரிமை அதிகாரிகள் என்ன காரணத்திற்காக மலேசியா செல்கிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பெரும்பாலனவர்களின் பதில், ‘ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா’ என்பதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு இப்போதே சமூக வலைத்தளங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா அவருக்கு எப்படியான ஃபேர்வெல் பார்ட்டியாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.





















