‘ஜனநாயகன்’ படத்தின் டைட்டில் மாற்றம்? - விஜயின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய காட்டாமான டைட்டில் இருந்தால்தான் தேர்தலின் கடைசி கட்ட நேரங்களில் அதை கூறி வாக்கு சேகரிக்க முடியும் என்று எண்ணி இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோவாக இருந்து வந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இன்று கூட ஈரோடு கூட்டத்தில் தொண்டர்களின் மத்தியில் ஆரவாரத்துடன் பேசினார். குறிப்பாக திமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து ஆவேசமாக பேசினார்.
விஜயின் அரசியல் பேச்சை அப்படியே விட்டுவிடுவோம். இப்போது அவரின் சினிமா தொடர்பான செய்திக்கு வருவோம். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து, தற்போது பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. படத்தின் முதல் பாடல் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டான நிலையில், இன்று மாலை இரண்டாவது சிங்கிள் பாடலும் வெளியாக இருக்கிறது.
டைட்டிலை மாற்றும் விஜய்?
இப்படி படக்குழு வேகமாக இயங்கி வரும் நிலையில், படத்தின் டைட்டீல் மாறப்போவதாக ஒரு தகவல் வந்துள்ளது. விஜயின் 69வது படம் அவரின் கடைசி படமாக இருக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு அவரின் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதை திட்டமிட்டே செய்து வந்துள்ளார் என்பதை விஜயின் அரசியல் நகர்வுகளே நமக்கு உணர்த்திவிடும். இப்படி யோசித்து திட்டம் தீட்டி தனது கடைசி படத்தை வெளியிட நினைத்த விஜய்க்கு பட தலைப்பின் மீதும் ஒரு திட்டம் இருக்கும் என்றே நாம் கணிக்கலாம்.
கடைசி பட அறிவிப்பு வந்தவுடன் படத்திற்கு என்ன தலைப்பு இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் முதல் சினிமா ரசிகர்கள் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். எப்பவும் போல, ரசிகர்கள் இந்த டைட்டில் இருக்கும், அந்த டைட்டில் இருக்கும் என்று தங்களுக்கு பிடித்த டைட்டில்களை சமூகவளைதளங்களில் வெளியிட்டு வந்தனர். விஜயின் முதல் படத்தின் டைட்டில் ஆனா ‘நாளைய தீர்ப்பு’ கடைசி படத்தின் தலைப்பு என்றும் ஒரு தகவல் வெளியானது. விஜய் அரசியலுக்கு வந்ததால், வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் தீர்ப்பை மாற்றப்போகும் தலைவர் என்றும், இந்த தலைப்பே பொருத்தமாக உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது.

‘ஜனநாயகன்’ வீரியமாக இல்லை
இந்த நிலையில், விஜயின் கடைசி படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்த டைட்டிலும் அவரின் அரசியல் பயணத்திற்கு பக்கப்பலமாக இருக்கும் என்று கருத்தப்பட்டது. தற்போது, விஷயம் என்னவென்றால், இப்படத்தின் தலைப்பை மாற்ற விஜய் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பு நன்றாக இருந்தாலும், வீரியமாக இல்லை என்று விஜய் நினைத்து வருகிறாராம். தனது அரசியல் பிரவேசத்திற்கு கடைசி படமும் கைகொடுக்கும் என்பதால் அதன் பெயரை மாற்றும் முயற்சியில் இருக்கிறாராம்.
‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படமும் வெளியாகிறது. இந்த டைட்டில் பவர்ஃபுல்லாக இருப்பதால், தன்னுடைய கடைசி படத்திற்கும் அதுபோன்ற டைட்டில் வைக்க யோசித்து வருகிறாராம் விஜய். திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய காட்டாமான டைட்டில் இருந்தால்தான் தேர்தலின் கடைசி கட்ட நேரங்களில் அதை கூறி வாக்கு சேகரிக்க முடியும் என்று எண்ணி இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறுக்கே வந்த செங்கோட்டையன்
‘ஜனநாயகன்’ பட டைட்டில் மாற்றத்திற்கு செங்கோட்டையனும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் விஜயிடம் டைட்டில் பவர்புல்லாக இல்லை, எம்ஜிஆர் தனது படத்திற்கு வைக்கும் டைட்டில் போல வையுங்கள் என்று அட்வைஸ் செய்ததாக சொல்கிறார்களாம். எம்ஜிஆர் தனது படங்களுக்கு வைத்த தலைப்புகள், அப்போதைய திமுக அரசை விமர்சனம் செய்ய கைகொடுக்கும் என்றும் செங்கோட்டையன் சொன்னதாகவும், அதனால், எம்ஜிஆர் படங்களில் ஏதேனும் டைட்டிலை தனது கடைசி படத்துக்கு வைக்க விஜய் முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ டைட்டில் மாற்றப்படுமா? இல்லை அதே டைட்டில் இருக்குமா? என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.





















