Vishwaroopam : காருக்குள் கமல்.. சுற்றி வளைத்த அமெரிக்க போலீஸ்.. விஸ்வரூபத்தின் திகில் சம்பவம்.. வெளியான ஷாக்
விஸ்வரூபம் படப்பிடிப்பின்போது அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை சக நடிகரான ஜெய்தீப் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் உள்ளிட்ட சிலரை அமெரிக்க போலீஸ் சுற்றிவளைத்ததையும், கிட்டத்தட்ட அது கைது நடவடிக்கைப் போல இருந்ததாகவும் நடிகர் ஜெய்தீப் அஹ்லவாத் தெரிவித்தார். நடிகர் ஜெய்தீப்பும் விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார்.
2013ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வரூபம். ஷூட்டிங்கின்போதும் படம் வெளியானபோதும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் விஸ்வரூபம் படப்பிடிப்பின்போது அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை சக நடிகரான ஜெய்தீப் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய ஜெய்தீப், ''விஸ்வரூபம் திரைப்படத்துக்காக அமெரிக்காவில் ஷூட்டிங் போய்கொண்டிருந்தது. கதைப்படி குறிப்பிட்ட பாலத்தில் சில ரவுண்டுகள் காரில் வர வேண்டும். ஆனால் அது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் அமெரிக்கா கடுமையான பாதுகாப்பின்கீழ் இருந்தது. டோல்கேட்டை கடந்ததும் 7 அல்லது 8 போலீசாரின் வாகனங்கள் எங்களை நோக்கி திரும்பியது. அவர்கள் எங்களைத்தான் குறி வைத்தார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. சைரனை ஒலிக்கவிட்டு எங்களை நோக்கி வந்தனர்.
எங்களை நோக்கி ஏதோ கோபமாக பேசினர். காருக்குள் கமல் சாரும் இருந்தார். நிச்சயம் அவர் சமாளித்துவிடுவார் என நினைத்துக்கொண்டேன். நாங்கள் எதுவுமே செய்யவில்லை அதனால் எங்களை சுட்டுவிடக்கூடாது எனவும் நினைத்துக்கொண்டேன். இறுதியில், இது ஒரு திரைப்பட படப்பிடிப்பு என்பதை அவர்கள் உணர்ந்தனர். நாங்கள் வாங்கிய அனுமதிகளைக் காட்டினோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு, எங்களைப் போக அனுமதித்தனர். ஆனால் அந்த 15 நிமிடங்கள் பயத்தின் உச்சத்திலேயே இருந்தோம் எனத் தெரிவித்தார்.