Jaibhim Rajakannu Manikandan | "என் அம்மா, படம் பாத்துட்டு ரெண்டு நாளா தூங்கல.." ஜெய்பீம் ’ராஜாகண்ணு’ மணிகண்டன்..
”கோடி விளக்கை ஏற்றினேன்.. ஊதி அணைத்தால் தாங்குமா” என்று பாடிக் காட்டினார் மணிகண்டன்
2D எண்டர்டெய்ண்ட்மெண்ட்ஸின் வழியாக சூர்யா, ஜோதிகா வழங்கி, சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம், பார்த்தவர்களின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
தனியார் யூ ட்யூப் சேனலுக்கு (Aran Sei) மணிகண்டன் அளித்திருக்கும் பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். “நான் பழங்குடி மக்களோட சேர்ந்து அவங்க வாழ்க்கை பழக்கங்களை கத்துக்கிட்டேன். செங்கல் சூளைக்கு அவங்க கூட வேலைக்கு போகும்போது, அவங்க படுற கஷ்டங்களை எல்லாம் பாத்தேன். ஆயிரம் கல்லு ஒரு நாளைக்கு அடிக்கிறாங்க. அந்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து டான்ஸ் ஆடுறாங்க.
’நம்ம எல்லோரும் எவ்வளவு வசதிகள் கிடைச்சாலும் வாழ்க்கையை பத்தி புகாரோடவே இருக்கோம், ஆனா அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அத காட்டிக்காம நிகழ்காலத்தை ரசிக்குறாங்க’ என்றார். நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதனால எனக்கு அந்த மொழி சுலபமா இருந்துச்சு. படம் பாத்துட்டு அம்மா ரெண்டு நாளா தூங்கல. அவங்களால அவங்க மகன் பிணமா நடிக்குறதை பாக்க முடியல” என்றார்.
வட தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஊருக்கு வெளியில் வாழும் இருளர் பழங்குடி மக்களைச் சேர்ந்த ராசாகண்ணு (மணிகண்டன்) திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகிறார். வழக்கை விரைவில் முடித்துவிட வேண்டும் என்ற அழுத்தத்தால், அப்பகுதி காவல்துறையினர் ராசாகண்ணு குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். அவருடன் அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்ற இருவரும் கைது செய்யப்படுகின்றனர். காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த மூவரும் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் ராசாகண்ணுவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கின்றனர். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் காணவில்லை என்பதால், தன் கணவர் ராசாகண்ணுவை மீட்டுத் தருமாறு சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான சந்துருவைச் (சூர்யா) சென்று சந்திக்கிறார் செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்). சந்துரு இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அரசின் சாதியவாத கோர முகம் அம்பலப்படுகிறது. ராசாகண்ணுவும், அவரது நண்பர்களும் என்ன ஆனார்கள், செங்கேணி நீதிமன்றத்தின் மூலம் வென்றாரா என்பதை மீதிக்கதையில் பேசியிருக்கிறது `ஜெய் பீம்’.
தொடக்க காட்சியில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களை சாதியின் அடிப்படையில் பிரிக்கிறது காவல்துறை. நிலம், அதிகாரம், எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பலமாக இருக்கும் சாதியினர் வீட்டுக்கு அனுப்பப்பட, எதிர்த்துக் குரல் கொடுக்க பலமற்ற ஒடுக்கப்படும் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, முடித்து வைக்கப்படாத வழக்குகளில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து பிரதான சாதிகளின் பெயர்களும் கூறப்பட்டு, பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமையைக் காட்சியாக்கிருப்பதில் இருந்து தொடங்குகிறது `ஜெய் பீம்’ படத்தின் கலக அரசியல். தமிழ் சினிமாவில் இதுவரை பெருமைக்காக முன்வைக்கப்பட்ட சாதிகள் அனைத்தையும் ஒற்றைக் காட்சியில் விமர்சனமாக அணுகும் காட்சியாக `ஜெய் பீம்’ தொடங்க, படம் முழுவதும் சூர்யா கதாபாத்திரம் கம்யூனிஸ்டாக, இந்திய அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டு, அதன் வழியாக மக்களுக்கு நீதி பெற்றுத் தரும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
இருளர் பழங்குடிகள் எலியைப் பிடிப்பது, பாம்பு பிடிப்பது, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தங்கள் பழங்கால மருத்துவக் குறிப்புகளைக் கற்றுக் கொடுப்பது, தங்கள் பழக்க வழக்கங்கள், சமூகத்தில் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகள் ஆகியவற்றின் சித்திரத்தை தொட்டுச் சென்றிருக்கிறது இந்தத் திரைப்படம். பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாகண்ணுவாக அசத்தியிருக்கிறார் மணிகண்டன். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் பாத்திரத்தை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். அரசு அமைப்பான காவல்துறையில் நிலவும் சாதியப் போக்குகள், அதில் இருந்து பிறக்கும் வன்கொடுமை முதலானவை வெளிப்படையாகவும், ரத்தமும் சதையுமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது `ஜெய் பீம்’. நீதிமன்றக் காட்சிகள் சற்றே நீளமாக, கதையை சுவாரஸ்யப்படுத்தும் நோக்கில் விசாரணையின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் கதைக்குப் பலம் சேர்த்துகின்றன.
சந்துருவாக சூர்யா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் போது காட்டும் எழும் கம்பீரம், லாக்கப்பின் பழங்குடிப் பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை குறித்து கேட்டவும் எழும் அறச்சீற்றம், நீதிமன்றங்களில் நிதானம் தவறாமல் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், வழக்கிற்காக செங்கேணியுடன் பயணத்தில் தன்னைத் `தோழன்’ என முன்னிறுத்தும் பண்பு, இறுதியில் ராசாகண்ணுவின் மகளுடன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் காட்சியில் எழும் மகிழ்வான உணர்வு என சூர்யாவின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மற்றொரு மைல்கல்லாக `ஜெய் பீம்’ அமைவதற்கு வாய்ப்புகள் ஏராளம். செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் முழுப் படத்தையும் தாங்கி நடித்துள்ளார். கணவனுடனான காதல், கணவனைக் காவல்துறையினரிடம் இருந்து மீட்க முடியாத கையறுநிலை, மகளைத் தூக்கிச் செல்லும் காவலர்களிடம் காட்ட முடியாத சினம், காவல்துறை உயரதிகாரியிடம் எழும் சுயமரியாதை என லிஜோமோலுக்கு விருதுகள் குவிக்கும் படமாகவும் `ஜெய் பீம்’ இருக்கும். சிறிய வேடம் என்றாலும் ரஜிஷா விஜயனின் அறிவொளி இயக்க ஆசிரியர் வேடம் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.