Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவின் ஹோம்ஸில் உள்ள மசூதி ஒன்றில், தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு ஆசிய நாடான சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் எனக் கூறி, சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள அலவைட் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான இமாம் அலி பின் அபி தலிப் மசூதி உள்ளது. வெவள்ளிக்கிழமை என்பதால், அந்த மசூதியில் இன்று மதியம் ஏராளமான இஸ்லாமியர்கள் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென அங்கு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மொத்தம் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சிரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை உயரலாம்
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிரியா உள்துறை அமைச்சகம் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே, இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள சிரியாவின் உள்துறை அமைச்சகம், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இது என்றும் கூறியுள்ளது.
சிரியாவில இஸ்லாமிஸ்ட் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நடந்த இரண்டாவது பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னர், கடந்த ஜூன் மாதத்தில், டமாஸ்கஸ் தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















