ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு பல்வேறு சிறிப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக, தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு பல்வேறு சிறிப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தெற்கு தென் மாவட்ட பயணிகளுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நெல்லை, பொதிகை, முத்துநர் விரைவு ரயில்களின் புறப்படும் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. இந்த ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
(வண்டி எண் 12632) திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நெல்லை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் நெல்லையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. ஆனால், ஜனவரி 1ஆம் தேதி நெல்லை விரைவு ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக, இரவு 8.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், வண்டி எண் (12662) செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு தினமும் பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு எழும்பூருக்கு சென்றடைகிறது. இந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி இந்த ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, செங்கோட்டையில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.55 மணிக்கே சென்னை எழும்பூருக்கு சென்றடைகிறது.
முத்துநகர் விரைவு ரயில் தினமும் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து தினமும் 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூருக்கு சென்றடைகிறது. இந்த ரயில் ஜனவரி 1ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் (வண்டி 16102) செங்கோட்டையில் இருந்து தென்காசி வழியாக தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 1ஆம் தேதி முதல் தாம்பரம் ரயில் நிலையத்தை காலை 6.05 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, தென் மாவட்ட பயணிகள் இந்த ரயிலின் புறப்படும் நேரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















