Indian 2 Kamal Haasan: நேதாஜி வழியில் இந்தியன் தாத்தா.. காந்தியின் பொறுமையை மறக்க வேண்டாம்.. கமல்ஹாசன் பளிச்!
Indian 2 Press Meet: நேதாஜி வழியில் போவது பற்றி இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் பேசும் வசனம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கமல்ஹாசன் இதற்கு பதிலளித்தார்.
கமல்ஹாசன் - ஷங்கர் இணை சேர பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 (Indian 2) படம் வரும் ஜூலை 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று ஷங்கர், கமல்ஹாசன், நடிகர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
நேதாஜி வழியில் இந்தியன் தாத்தா
அப்போது நேதாஜி வழியில் போவது பற்றி இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) பேசும் வசனம் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “கவிஞர்களாக நாம் எல்லா உணர்வுகளையும் தொட்டுப் பார்க்கலாம். இது ஒரு கலைப்படைப்பு. ரௌத்திரம் பழகு என பாரதியார் சொல்லி விட்டதால் எல்லாரிடமும் பழக வேண்டியது இல்லை. நேதாஜியின் வீரத்தை ஒட்டுமொத்தமாக மறக்க வேண்டிய அவசியமில்லை, காந்தியின் பொறுமையை ஒட்டுமொத்தமாக இழக்க வேண்டிய அவசியமில்லை.
‘ப்ரூஸ்லி படம் பார்த்தால் உதைக்க வேண்டியதில்லை’
இது இரண்டையும் எப்படி ஒன்றிணைப்பது என்பதை யோசிக்க வேண்டும், நேதாஜியின் பயணம், பட்டினி, ஒன்றுதிரட்டல் இவற்றைப் பாருங்கள். காந்தி மட்டும் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் இல்லாமல் வாங்கி இருக்க முடியாது. ஒரு புறம் வன்முறைத் தாக்குதல், மறுபுறம் அகிம்சைத் தாக்குதல், சட்டப்பூர்வமானத் தாக்குதல், மக்கள் குரல் இவை எல்லாமே இருந்தன. பான் இந்தியன் படம் மட்டுமில்லை இது, பான் இந்தியன் எண்ணம், குற்ற உணர்வு, வீரம் எல்லாவற்றையும் தேவையான நேரத்தில் ஒன்றாய் குவிக்க வேண்டிய கடமை உள்ளது.
ப்ரூஸ்லி படம் பார்த்தால் எல்லாரையும் உதைக்க வேண்டியதில்லை, வெளியே வந்து அதனைப் பற்றி பேச வேண்டும். வன்முறை, கோபம் நம்முள் இருக்கும். ஆனால் அதை எல்லாம் செய்து பார்க்கக்கூடாது” எனப் பேசியுள்ளார்.
தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “சமூக வலைதளங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல விமர்சனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றே நெகட்டிவிட்டி பரப்புபவர்களைத் தவிர்க்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் இந்தியன் படத்தினை ரீ விசிட் செய்யாவிட்டாலும் படம் ஒர்க் ஆகும்” எனப் பேசியுள்ளார்.
இந்தியன் 2 படத்தில் சித்தார்த், மறைந்த விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், நடிகர்கள் பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: Amstrong: ”வடசென்னையின் அரசன் வீழ்த்தப்பட்டார்” - பா.ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் உருக்கம்