47 years of Ilaiyaraaja: 'அன்னக்கிளி' கொடுத்த அன்பு பரிசு இளையராஜா.. தமிழ் சினிமா வரலாற்றில் இசையின் அளவுகோல்..!
இளையராஜாவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுத்தார் பஞ்சு அருணாச்சலம் என்றாலும் அவரின் 'அன்னக்கிளி' படம் மூலம் தான் நமது தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இசைஞானி கிடைத்தார்.
தமிழ் சினிமாவின் அகராதியில் இசை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சினிமாவின் இசையை இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்கு பின் என்பது தான் ஒரு சாமானிய இசை ரசிகனின் அளவுகோலாக இருந்தது. அவர் நம் தமிழ் சினிமா கண்டெடுத்த ஒரு பொக்கிஷம். அவரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாச்சலத்தையே சேரும்.
எளிமையான கிராமிய கதை :
தமிழ் சினிமாவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படமாக கருதப்படுவது 'அன்னக்கிளி' திரைப்படம். மிகவும் எளிமையான கிராமிய பின்னணியில் உருவான கதை தான் என்றாலும் அப்படத்திற்கு அத்தனை அழகு சேர்த்தனர் படத்தின் நடிகர் நடிகையனரான சுஜாதா, சிவகுமார், படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், செந்தாமரை உள்ளிட்டோர். ஒவ்வொருவரும் அவர்களுக்கான அடையாளத்தை மீண்டும் ஒருமுறை அன்னக்கிளி திரைப்படம் மூலம் முத்திரை பதித்தனர்.
சுஜாதாவின் கனமான கதாபாத்திரம் :
சுஜாதா - சிவகுமார் இடையே இருந்த 'சொல்லாத காதல்' ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர அதை சொல்லி இருந்தால் என்ன என்ற ஆத்திரம் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொண்டது. அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமாக இருந்தது தேவராஜ் - மோகன் இணைந்து இயக்கிய 'அன்னக்கிளி' திரைப்படம். இனிமையான இசை, எளிமையான திரைக்கதை, தெளிவான வசனங்கள் இவை அனைத்தும் படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சேர்த்தது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் கண்முன்னே அப்படியே நிற்கும் அளவிற்கு பதறவைத்தது. பாட்டு தான் எல்லாமே என வாழும் அன்னக்கிளி துணைக்கு குயிலையும், குருவியையும் சேர்த்து கொண்டு பாடும் பாடல்கள் தான் அந்த கதாபாத்திரத்துக்கு வெயிட்டேஜ் சேர்த்தது. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் போன்ற படங்களுக்கு பிறகு மிகவும் ஒரு கனமான கதாபாத்திரத்தில் சுஜாதாவின் நடிப்பு அற்புதம். அன்னக்கிளியாக சுஜாதா நடிக்கவில்லை வாழ்ந்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அடம்பிடித்த பஞ்சு அருணாச்சலம் :
பொதுவாகவே எஸ்.பி.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு விஜய பாஸ்கர் தான் இசையமைப்பாளராக இருப்பார். அவர்களின் காம்போ சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். ஆனால் இந்த முறை பஞ்சு அருணாச்சலம் சற்று வித்தியாசத்தை எதிர்பார்த்தார். தமிழ் சினிமா இசையில் புதுமையை கொண்டு வர வேண்டும் ஏன் ஆசைப்பட்டு இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். பலரும் வேண்டாம் என அறிவுறுத்தியும் சற்றும் சலனம் இல்லாமல் இளையராஜா தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். அவரின் பிடிவாதத்தால் தான் இன்று நமக்கு இளையராஜா கிடைத்தார்.
டைட்டில் கார்டில் இளையராஜா :
படம் வெளியான ஒரு சில நாட்களில் எல்லாம் இளையராஜாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் அன்னக்கிளி படம் எப்போது 100 நாட்களை தாண்டியும் சக்கை போடு போட்டதோ அன்றில் இருந்து இளையராஜா என்ற பெயர் கொண்ட டைட்டில் கார்டு போட்டவுடனே விசிலும் கிளாப்ஸும் பறந்தன. 'மச்சானை பாத்தீங்களா' என்ற பாடலுக்கு ஒட்டுமொத்த திரையரங்கமே ஆட்டம் போட்டது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றாலும் வசூலில் சாதனை படைத்தது. படத்தின் திரைக்கதைக்கும், வெற்றிக்கும் பாடல்கள் பக்கபலமாக இருந்தது.
கிராமத்து கதை, எளிமையான சாமானியனுக்கும் பரிச்சயமான இசைவாத்தியங்கள், குயில்கள், குருவிகளின் ஓசையை படம் முழுக்க கொட்டிவிடும் இளையராஜா தான் அன்னக்கிளி படத்தின் உண்மையான ஹீரோ.
47 ஆண்டுகளாக இளையராஜா :
இளையராஜாவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுத்தார் பஞ்சு அருணாச்சலம் என்றாலும் அவரின் 'அன்னக்கிளி' படம் மூலம் தான் நமது தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இசைஞானி கிடைத்தார். மே மாத கோடை வெயிலில் இதம் தரும் இதமான கோடை மழையாக அமைந்தது அன்னக்கிளி திரைப்படம். 1976ல் இதே நாளில் வெளியான அன்னக்கிளி திரைப்படம் இன்றுடன் 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதே சமயத்தில் இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்து 47 ஆண்டுகள் முடிகிறது. இசை உள்ள வரை இளையராஜாவின் இசை கொடி கட்டி பறக்கும். எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இளையராஜாவின் இசை என்றுமே அவர்களுக்கு ஒரு முன்னோடியாய் ஆச்சரியப்படுத்தும்.