Director Mohan G: ‛அஜித் பற்றி நான் பேசினால் தவறாகிவிடும்’ மோகன் ஜி பளிச் பதில்!
தன் படங்களின் மீதான நடிகர் அஜித்தின் பார்வை தொடர்பான கேள்விக்கு இயக்குநர் மோகன் ஜி கொடுத்த பதிலை இங்கே பார்க்கலாம்.
தன் படங்களின் மீதான நடிகர் அஜித்தின் பார்வை தொடர்பான கேள்விக்கு, இயக்குநர் மோகன் ஜி கொடுத்த பதிலை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ மூலமாக இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி. அடுத்ததாக, இவர் இயக்கத்தில் வெளியான ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்த இரண்டு படங்களிமே பிரபல நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் சகோதரரான நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப்படங்களின் மூலமாக அவருக்கும், ரிச்சர்ட்டுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில் மோகன் ஜி படங்களின் மீதான அஜித்தின் பார்வை என்ன என்பது குறித்து மோகன் ஜியிடம் கேட்கப்பட்டது.
இது குறித்து மோகன் ஜி பேசும் போது, “ இது வரை அஜித் என்ற பெயரை நாங்கள் எங்கேயுமே பயன்படுத்த வில்லை. எந்த பேட்டியிலும் நாங்கள் அவரை பற்றி பேசியதில்லை. அவர் என் படங்களை பற்றி என்ன சொல்லி இருக்கிறார். என் படங்கள் மீதான அவர் குடும்பத்தின் பார்வை என்ன உள்ளிட்ட எந்த விஷயங்களையும் நாங்கள் எங்கும் சொன்னதில்லை. அஜித்தின் மைத்துனர்தான் ரிச்சர்ட் என்ற அடையாளத்தை கூட நாங்கள் எங்கும் பயன்படுத்தியதில்லை. காரணம் அது தவறாகிவிடும். அவர் என் படங்களை பார்த்தார் என்றால் ஏன் பார்த்தார்.. அப்படியானால் என்னுடைய படங்களுக்கு அஜித் ஆதரவு தருகிறாரா? என்பார்கள். பார்க்கவில்லை என்றாலும், ஏன் பார்க்கவில்லை என்று விமர்சனங்களை வைப்பார்கள். அதனால், அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர் அவரது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். நான் அவரின் பரமரசிகன்” என்றார்.
பகாசூரன் கதை என்ன?
‘பகாசூரன்’ என்ன மாதிரியான கதையம்சம் கொண்டது என்பது பற்றி முன்னதாக அந்தப்படத்தின் இயக்குநர்
மோகன் ஜி பேசும் போது, “ ‘பகாசூரன்’ படமானது தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில் வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்? என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நிறைய உண்மை சம்பவங்கள் இருக்கிறது” என்று பேசி இருந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் 'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை இயக்குனர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ‘பகாசூரன்’ படத்தில் இருந்து முதல் பாடலாக ‘சிவ சிவாயம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக 'காத்தம்மா' பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காத்தம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. குத்துப்பாடலாக வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருக்கிறார்