டிக்கெட் 100 ரூபா.. பாப்கார்ன் 200 ரூபா.....இந்தியாவில் ஆண்டுக்கு இத்தனை டன் பாப்கார்ன் விற்பனையா? அம்மாடி..
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகள் ஏன் விலை உயர்ந்ததாக இருக்கின்றன.திரையரங்கங்கள் இவற்றின் மூலம் எவ்வளவு வருவாயை ஈட்டுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் மூலம் வரும் வருவாய் எவ்வளவு என்று தெரியுமா?
ஒரு படத்திற்கு போகிறோம் என்றால் படத்தின் டிக்கெட்டிற்கு 150 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் ஒரு ரெகுலர் பாப்கார்னுக்கு ரூ.250 செலவு செய்யவேண்டியதாக இருக்கிறது. இதற்காக நாம் பலமுறை சலித்துக்கொண்டிப்போம். ஆனால் இதற்கு பின் இருக்கும் காரணத்தை யோசித்திருக்கிறோமா?
திரையரங்குகள் படங்களின் வெற்றியை விட அதிக லாபம் அடைவது திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பண்டங்களால்தான். ஒரு திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கத்திற்கு முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மிக சொற்பமான அளவே படத்தின் லாபம் போய்சேரும். உதாரணமாக ஒரு படத்தில் 60 முதல் 70 சதவிகிதம் தயாரிப்பாளருக்கும் மீதம் 30 அல்லது 25 சதவிகிதம் திரையரங்குகளுக்கு என பிரிக்கப்பட்டிருக்கும். இந்த விகிதம் படம் வெளியான ஒரு சில வாரங்கள் கழித்தே அதிகரித்து 50-50 என்கிற அளவு லாபம் பிரிக்கப்படும். இதன் காரணத்தினால் திரையரங்குகள் தங்களது உணவுப் பண்டங்களின் விற்பனையை முதன்மையாக சார்ந்திருக்கின்றன.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளை கொண்டிருக்கிறது ஐநாக்ஸ். இந்த திரையரங்குகளில் படம் பார்க்க செல்லும் ஒரு நபர் சராசரியாக 66 ரூபாய் உணவிற்காக செலவிடுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு தகவல் வெளியிட்டது.
ஐனாக்ஸ் மற்றும் பி. வி. ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட தங்களது மொத்த வருமானத்தில் 25 சதவிகிதம் உணவுப் பண்டங்களில் இருந்து பெறுகின்றன. கடந்த 2017 – 2018-ஆம் ஆண்டு ஐநாக்ஸ் வெளியிட்ட தகவலின் படி உணவுப்பண்டங்கள் மற்றும் உணவு தொடர்பான விளம்பரங்கள் மூலமாக மட்டும் சுமார் 306 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. ஆனால் உணவுப் பொருட்களுக்காக அவர்கள் செலவிட்ட தொகை வெறும் 74.4 கோடி மட்டுமே. இது கிட்டதட்ட சுமார் 400% லாபம் ஆகும்
அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஐநாக்ஸ் வெளியிட்ட தகவலின்படி இந்தியா முழுவதும் ஓராண்டில் சுமார் 863 டன் பாப்கார்ன், 19 லட்சம் 38 ஆயிரம் சமோசாக்களை விற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற 29 நகரங்களை காட்டிலும் அதிகமான பாப்கார்ன் மும்பையில் விற்கப்பட்டிருக்கிறது. மேலும் திரைப்பட ரசிகர்களுக்கு அனைத்து வகையான உணவுகளையும் வழங்க பல வகையான உணவு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான வசூல் ஈட்டிக்கொண்டிருந்த திரையரங்குகள் கொரோனா காலத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. தற்போது ரசிகர்கள் மறுபடியும் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். ஆனால் ஓடிடியின் வருகைக்குப் பின் இந்த எண்ணிக்கையில் எந்த அளவிற்கான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.