HBD Mysskin: அன்பும், கோபமும் கொண்ட ஆளுமை.. ’ட்ரெண்டிங் ஸ்டார்’ மிஷ்கின் பிறந்தநாள் இன்று..!
மிஷ்கினின் இயற்பெயர் சண்முகராஜா என்பது இங்கு பலருக்கும் தெரியாது. பின்னர் ஏன் அவர் மிஷ்கின் என அழைக்கப்படுகிறார் என நினைக்கிறீர்களா?.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படும் நடிகர் மிஷ்கின் இன்று 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சண்முகராஜா என்னும் மிஷ்கின்
மிஷ்கினின் இயற்பெயர் சண்முகராஜா என்பது இங்கு பலருக்கும் தெரியாது. பின்னர் ஏன் அவர் மிஷ்கின் என அழைக்கப்படுகிறார் என நினைக்கிறீர்களா?. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் தி இடியட் நாவலின் கதாநாயகனான இளவரசர் பெயர் மிஷ்கின். அந்த கேரக்டரால் ஈர்க்கப்பட்ட அவர் தன் பெயரை மிஷ்கின் என மாற்றிக் கொண்டார். சினிமா மீது தீரா மோகம் கொண்ட அவர் முதன்முதலில் இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநர் கதிரிடம் தான் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
தீவிர புத்தக வாசிப்பாளரான மிஷ்கின் அவரிடம் 8 மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். தொடர்ந்து அவரின் அடுத்தக்கட்ட திரையுலக பயணம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான யூத் படம் மூலம் தான் தொடங்கியது. அந்த படத்தில் ஒரு காட்சியில் மொட்டைத் தலையுடன் மிஷ்கின் தோன்றுவார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற பிரபல குத்து பாடலான “ஆல் தோட்ட பூபதி” உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தவர் மிஷ்கின் தான். இது பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது.
அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் இயக்குநர்
உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநரானார். இந்த படத்தில் தான் நரேன், பாவனா உள்ளிட்ட பலரும் அறிமுகமானார்கள். இந்த படம் பற்றி தெரியாதவர்கள் கூட “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்” பாடலை தெரியாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இப்படம் அடிதடி கதை என நினைத்து பார்க்க சென்றவர்களுக்கு செம அதிர்ச்சி. காரணம் அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லி முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் மிஷ்கின்.
கவனிக்க வைத்த படங்கள்
இரண்டாவது படைப்பாக அஞ்சாதே வெளியானது. முதலில் நண்பர்கள் எதிரிகளான நிலையில்,இறுதியில் வழக்கம்போல அன்பை தூவியிருப்பார். இதில் பிரசன்னா வில்லனாக நடித்த நிலையில் சுயநலம் மிகுந்த வில்லத்தனத்தை காட்டி சாதாரண ஒரு கதையை எப்படி எல்லாம் ரசித்து எடுக்கலாம் என்பதை காட்டியிருப்பார்.
இதன்பின்னர் தாலாட்டு கேட்காதவர்களின் குரலாக ஒலித்த “நந்தலாலா”வில் கதையின் நாயகனாக நடித்து கண்கலங்க செய்தார் மிஷ்கின். பின்னர் காமத்தை வேடிக்கையாக்கும் கும்பலுக்கு எதிராக ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் செய்யும் எதிர்பாரா முடிவுகளாக “யுத்தம் செய்” வெளியானது. இருள் சூழ்ந்த சினிமாவில் மெழுவர்த்தி ஏற்றிக் கதை சொன்ன “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, நல்ல பேயிடம் எதிரொலிக்கும் காதல் மொழியை “பிசாசு” படத்திலும், துப்பறியும் நபரின் கதையான ஷெர்லாக் ஹோம்ஸை “துப்பறிவாளன்” ஆகவும், உளவியல் த்ரில்லாராக வெளியான ”சைக்கோ” என ஒவ்வொன்றும் மிஷ்கினின் தனித்துவமான அடையாளங்கள்.
மிஷ்கின் படங்களை எல்லாம் கவனித்தால் அதில் அன்பு என்ற ஒன்றே பிராதனமாக இருக்கும். வில்லன் கூட அன்பை தேடி தான் எதிர்மறையான எண்ணங்களை கொண்டவனாக மாறியிருப்பான். ஒரு காலத்தில் மிஷ்கின் படமா புரியாது என சொன்னவர்கள், இன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் அவர் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம்.
நடிகராக மிளிரும் மிஷ்கின்
நந்தலாலாவில் நடிக்க தொடங்கிய மிஷ்கின் இன்று பிஸியான நடிகராக வலம் வருகிறார். சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு, பேச்சுலர், மாவீரன் என தொடர்ந்து நடித்து வரும் அவர், தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதேசமயம் பாடகராக அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். இதில் சில படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். வெளிப்படையாக பேசும் மிஷ்கின் பேச்சு இன்றைக்கு இணையத்தில் ட்ரெண்டிங் என்றால் அவர் ரசிகர்களை எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளார் என்பதை அறிந்துக் கொள்ளலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மிஷ்கின்..!
மேலும் படிக்க: ட்விஸ்ட் வைத்த ஜோசியர்.. ஈஸ்வரிக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் நேற்று..