HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
லாலேட்டன் என்று செல்லமாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லாலை நடிகராகவும் சினிமாவில் பன்முக கலைஞராகவுமே நாம் அறிந்துள்ளோம். ஆனால், அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் ஆவார்.
உலகளவில் மலையாள சினிமாவிற்கென்று தனி இடம் உண்டு. அந்த மலையாள திரையுலகம் தந்த சிறந்த நடிகர்களில் மோகன்லாலுக்கு தனி இடம் உண்டு. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மோகன்லாலுக்கு இன்று 64வது பிறந்தநாள் ஆகும்.
மல்யுத்த வீரர் மோகன்லால்:
லாலேட்டன் என்று செல்லமாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லாலை நடிகராகவும் சினிமாவில் பன்முக கலைஞராகவுமே நாம் அறிந்துள்ளோம். ஆனால், அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் ஆவார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டது போலவே மல்யுத்தம் மீதும் தீராத ஆர்வம் கொண்ட இளைஞராகவே உலா வந்துள்ளார் மோகன்லால். அதற்காக தீராத பயிற்சியும், உடல் தேகத்தையும் வளர்த்துக் கொண்டவர்.
மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் மோகன்லால். 1977-78ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற மல்யுத்த சாம்பியன் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்று அசத்தியவர். மாநில அளவில் அசத்தியவருக்கு தேசிய அளவில் பதக்கங்களை குவிக்க வாய்ப்பு கண் முன் வந்து நின்றது. டெல்லியில் நடைபெற இருந்த தேசிய மல்யுத்த சாம்பியன் போட்டிக்கும் தேர்வாகி மல்யுத்த வீரனாக தனது பயணத்தை பெரிதாக கொண்டாட அவருக்கு வாய்ப்பு அழைத்தது.
நடிப்பா? மல்யுத்தமா?
ஆனால், அவரை மக்கள் கொண்டாடும் கலைஞனாக மாற்றுவதற்கான வாய்ப்பும் அதே நாளில் வந்தது. ஆம், தேசிய மல்யுத்த சாம்பியன் போட்டி நடைபெறும் அதே நாளில் அவருக்கு அறிமுக இயக்குனர் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கான அழைப்பும் வந்துள்ளது. நடிப்பா? மல்யுத்தமா? என்று முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரம் மோகன்லாலுக்கு வந்தது. மல்யுத்தத்தை காட்டிலும் நடிப்பே முக்கியம் என்று முடிவெடுத்த மோகன்லால் அந்த படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றார்.
அங்கே மோகன்லாலின் தோற்றத்தையும், நடிப்பையும் கண்டு அசந்து போன இயக்குனர் அவரையே அந்த படத்திற்கு தேர்வு செய்தனர். தேசிய அளவில் பதக்கங்களை குவித்து பெருமை சேர்க்கும் வாய்ப்பை உதறிவிட்டு, மோகன்லால் தேர்வான அந்த படம்தான் அவரது முதல் படமான மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள். மலையாள சினிமாவில் அந்த படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அந்த இயக்குனர்தான் மலையாள சினிமாவை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பாசில்.
வாழ்த்துகள் லாலேட்டன்:
பாசில் இயக்கிய இந்த படத்தில் சைக்கோ கதாபாத்திரம் கொண்ட ஒரு கணவனாக நடித்து முதல் படத்திலே மோகன்லால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பார். நடிக்க வந்த பிறகு பிரேம் நசீர், சுகுமாறன், நெடுமுடி வேணு, மம்மூட்டி என பல ஹீரோக்களுடன் துணை கதாபாத்திரத்திலே மோகன்லால் நீண்ட வருடங்கள் நடித்து வந்தார். பின்னர், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். மலையாள சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள மோகன்லால் மென்மேலும் பல வித்தியாசமான படங்களில் நடிக்க வாழ்த்துகள்.