வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா ஹன்சிகா? விரைவில் கைது ஆகிறாரா?
ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஹன்சிகாவின் சகோதரரின் மனைவி தொடர்ந்த வழக்கு தீவிரம் அடைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வந்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, உதயநிதி ஆகியோருடன் நடித்து பிரபலமானவர். மும்பையை பூர்வீகமாக கொண்ட ஹன்சிகாவிற்கு பிரசாந்த் மோத்வானி மற்றும் பிரதீப் மோத்வானி என்ற சகோதரர்கள் உள்ளனர்.
வரதட்சணை கொடுமைப்படுத்தினாரா ஹன்சிகா?
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கும், நான்சி என்ற பெண்ணுக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர், பிரசாந்த் - நான்சி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் திருமணமான ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், நான்சி திருமணத்திற்கு பிறகு தன்னை தனது மாமியார் ஜோதிகா மோத்வானியும், நாத்தனார் நடிகை ஹன்சிகாவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரைத் தொடர்ந்து, நான்சியின் குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை வளையத்தில் ஹன்சிகா:
அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்சியின் புகார் காரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, ஹன்சிகாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானியிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நான்சியின் புகார் காரணமாக ஹன்சிகா விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார். இந்த வழக்கின் விசாரணை தீவிரமானால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா மீதும், அவரது தாயார் மீதும் 498 ஏ, 323, 352 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்சி அளித்துள்ள புகாரில் திருமணத்திற்கு பிறகு தான் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன். தனது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் தான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்ந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கணவரைப் பிரிந்து வாழும் ஹன்சிகா:
நான்சியும், பிரசாந்தும் திருமணம் நடந்த ஓராண்டில் பிரிந்த நிலையில் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை காரணமாக கடந்த பிப்ரவரியில் ஹன்சிகா தனக்கும், தனது தாய்க்கும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஹன்சிகா மோத்வானி கடந்த 2022ம் ஆண்டு சோஹைல் மோத்வானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்த அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகிய ஹன்சிகா 2007ம் ஆண்டு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் எங்கேயும் எப்போதும் படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் படம் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்தார். தற்போது, ரவுடி பேபி, மேன், காந்தாரி, லவ் அஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.





















