Roshini : அபிராமி அபிராமி ! என உருகிய கமல்... 'குணா' பட நாயகி ரோஷிணி இப்போ என்ன செய்கிறார்?
Roshini : கமல்ஹாசனின் 'குணா' படத்தின் ஹீரோயின் ரோஷினியின் தற்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர், நடிகைகள் ஒரே படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி அதற்கு பிறகு காணாமல் போனவர்கள் பலர் இருப்பார்கள். அப்படி ஒரே படத்தில் தெய்வீக உணர்வை ஏற்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் 'அபிராமி! அபிராமி! ' என கொண்டாட வைத்தவர் நடிகை ரோஷினி. அவர் தான் சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான 'குணா' படத்தின் ஹீரோயினாக நடித்தவர் தான் ரோஷினி.
கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பில் அவரின் திரை பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் படமாக அமைந்தது 'குணா' திரைப்படம். இளையராஜாவின் இசையில், ரேகா, ஜனகராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காதலின் வலியும் அதனால் ஏற்படும் வேதனையின் உச்சத்தையும் மைய கருவாக வைத்து வெளியான இப்படத்தில் தன்னுடைய வலியை வேதனையை கமல்ஹாசன் 'அபிராமி அபிராமி' என சுத்தி சுத்தி பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம். அதே போல கொடைக்கானலில் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தை மிகவும் சிரமப்பட்டு கடைசியில் குகை ஒன்று தேடி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குகைதான் அப்படத்திற்கு பிறகு குணா கேவ்ஸ் என பிரபலமாக அழைக்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த நடிகை ரோஷிணி தான் இப்படத்தின் கதாநாயகி என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் பிரேமிலும் மிகவும் அழகாக தனது எமோஷனை வெளிப்படுத்தி இருப்பார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
அழகும் நடிப்பு திறமையும் கொண்ட ரோஷிணி, குணா படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் அமெரிக்கா வாழ் வட இந்தியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் ரோஷிணி குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. உண்மையில் அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்பது சினிமா வட்டாரம் உட்பட யாருக்குமே தெரியவில்லை.
உண்மையிலேயே நெருங்கிய சினிமா வட்டாரத்தின் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் நடிகர் கமல்ஹாசன், யாழ்ப்பாணத்தில் மனம் குன்றியவராகவும் அங்கே வரும் என்.ஆர்.ஐ பெண்ணைக் காப்பாற்றும் கதையை பின்னணியாக கொண்டு எடுக்க திட்டமிடப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பு நடத்த ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த திரைக்கதையை மாற்றியமைத்து 'குணா' என்ற பெயரில் சந்தான பாரதி இயக்கினார். அதில் கமல்ஹாசன் தோற்றம் மற்றும் கேரக்டர் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இப்படத்தின் ஹீரோயினாக பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் இறுதியில் கமல்ஹாசன் மனைவி சரிகாவின் மூலம் தான் ரோஷிணி அணுகப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்திற்கு பிறகு அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் ஒட்டுமொத்தமாக திரைத்துறையை விட்டு விலக ரோஷிணி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.