அவ்வளவு பஞ்சமா? 'பட்டி டிங்கரிங்' செய்து உருவாக்கப்பட்ட தமிழ் சினிமா தலைப்புகள்!
சமீப காலமாக தமிழ் சினிமாவில் டைட்டிலுக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது போலும், ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டிலின் முன்னாலும் பின்னாலும் சில வார்த்தைகளை இணைத்து புதிய பெயரை உருவாக்கி விடுகின்றனர்
சினிமா இயக்குநர்களுக்கு திரைப்படம் எடுப்பதை விட கூடுதல் சவாலானது தான் எடுக்கும் படத்திற்கு பொருத்தமான தலைப்புகளை தேர்வு செய்வதுதான். ஏனெனில் ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாக அந்த படத்தின் தலைப்புதான் ஆடியன்ஸை சென்றடையும், அதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அந்த தலைப்பு படத்தின் வெற்றிக்கு கூட ஒரு விதத்தில் காரணமாக அமையலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெயருக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது போலும், ஏனெனில் ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டிலின் முன்னாலும் பின்னாலும் சில வார்த்தைகளை இணைத்து புதிய பெயரை உருவாக்கி விடுகின்றனர். இன்னும் சில இயக்குநர்கள் பழைய படங்களில் பெயரை அப்படியே வைத்துவிடுகின்றனர்.
1.கத்தி - கத்தி சண்டை
ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘கத்தி’ இந்த படம் டூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் கத்தி என்ற பெயருடன் சண்டையை இணைத்து ‘கத்தி சண்டை’ என்ற பெயரில் மற்றொரு படம் வெளியானது. இந்த படத்தை சுராஜ் இயக்க அதில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
2. புலி - பாயும் புலி
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம்தான் புலி. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கியிருந்தார்.இந்த படம் குழந்தைகளின் ஆல் டைம் ஃபேவரைட். இதே போல புலி என்ற பெயரின் முன்னால் பாயும் என்பதை இணைத்து, பாயும் புலி என்ற பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடித்தார் விஷால். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
3.குரு-அசுரகுரு
1980 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘குரு’ இந்த படம் ராபரி கதைக்களத்தை கொண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு குருவிற்கு முன் அசுர என்பதை இணைத்து’அசுர குரு’ என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. அதில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.
4.நாய் சேகர் - நாய் சேகர் ரிட்டன்ஸ்
தலைநகரம் படத்தில் காமெடியனாக நடித்த வடிவேலுவின் பிரபலமான கதாபாத்திரம்தான் நாய் சேகர். இந்த கதாபாத்திரம் பெயரில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. வடிவேலுதான் மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ் தற்போது நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலும் மீண்டும் தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயர் வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. சாட்டை - அடுத்த சாட்டை
அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு ஆசிரியரை மையமாக வைத்து சாட்டை படம் உருவாகியிருந்தது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு சென்றவுடன் சந்திக்கும் பிரச்சனைகளை ஒரு கல்லூரி ஆசிரியர் எவ்வாறு டீல் செய்கிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அடுத்த சாட்டை படம் உருவாகியிருந்தது.
இந்த படங்களை போலவே ஒரே பெயர் கொண்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.