Film Festival History - 1 | 'திரைப்பட விழாக்களும்’ அதன் சுவாரஸ்சிய வரலாறும்..!
இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா, ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுடன் கேன்ஸ் விழாவும் சேர்த்து ” Big 3 ” என்றழைக்கப்படுகின்றன
திரைப்பட விழா என்பது சென்னை, கோவா திரைப்பட விழா தொடங்கி சர்வதேச அளவில் பல விழாக்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு பின்னும் சுவாரஸ்யமான வரலாறுகள் உள்ளன, தனித்துவங்கள் உள்ளன. அவற்றைத்தான் இந்த “திரைப்பட விழாவின் கதை” தொடரில் பார்க்க உள்ளோம்.
திரைப்பட விழா குறித்த தொடரை, வரும் மே 17ஆம் தேதி தொடங்க உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவைக் கொண்டே தொடங்கலாம். உலக அளவில் சினிமா குறித்த ஆர்வமுள்ள எவருக்கும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான திரைப்பட விழா, கேன்ஸ். திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்து, சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் உலகளவில் மிகப் பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் முதன்மையான விழா என்று கூட இந்த கேன்ஸ் திரைப்பட விழாவை சொல்லலாம். இந்த 2022-ம் ஆண்டிற்கான திரைப்பட விழா 75-வது விழா என்பது கூடுதல் சிறப்பாகும். தற்போதைய திரைப்பட விழாக்களில் குவியும் சர்வதேச சினிமா பிரபலங்களே திரைப்பட விழாவின் சர்வதேச சினிமாவின் மீதான வீச்சை சொல்லும்.
சர்ச்சையோடு தொடங்கப்பட்ட கேன்ஸ்
75-வது ஆண்டை எட்டி இருக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டதே மிக சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டது. இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா, ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுடன் கேன்ஸ் விழாவும் சேர்த்து ” Big 3 ” என்றழைக்கப்படுகின்றன. ”Big 3” -யில் ஒன்றாக இருந்தாலும் கேன்ஸ் ஆரம்பிக்கபட்டதே இன்றைய வெனீஸ் திரைப்பட விழாவிற்கு எதிராகத்தான் என்பது குறிப்பிடதக்கது. . தனித்துவமான நியாயமான சுதந்திரமான எவ்வித அரசியல் இடர்களும் இல்லாமல் ஒரு சர்வதேச திரைப்பட விழாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக 1939-ல் ஆரம்பிக்கப்பட்டதே கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா.
என்ன சர்ச்சை?
1938-ம் ஆண்டு நடைபெற்ற வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நிகழ்ந்த அரசியல் அத்துமீறலால் அப்போதைய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரஞ்ச் திரைப்படத்திற்கு விருது வழங்கப்படவில்லை. விருது வழங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அப்போதைய இத்தாலிய சர்வாதிகார ஆட்சியாளரான முசோலினி மற்றும் ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் தூண்டுதலால், நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத்தை விடுத்து வேறு படத்திற்கு வழங்கப்பட்டது. சர்வாதிகாரி முசோலினியின் மகனின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட திரைப்படமான ”லூசியானோ செர்ரா, பைலட்” ( Lucciano serra, pilot ) என்ற இத்தாலிய திரைப்படத்திற்கு அந்த விருது வழங்கப்பட்டது நடுவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. மேலும், அப்போது நடைமுறையில் இருந்த திரைப்பட விழா விதிகளுக்கு புறம்பாக 1936-ல் ஜெர்மனியில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டி (1936 Summer olympics) குறித்த ஆவணப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு பிரிவு படத்திற்கான விருதினை வழங்கப்பட்டது. அந்த செயல்பாடுகளால், ஜூரிக்களின் குழுவில் இருந்த பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் விலகியதோடு மட்டுமல்லாமல், தங்கள் நாட்டு திரைப்படங்களை இனி திரையிடப்போவதில்லை என்ற முழக்கத்தோடு வெளியேறினர்.
கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கிய எப்படி?
வெனிஸ் திரைப்பட விழாவிலிருந்து வெளியேறிய நடுவர்களை தொடர்ந்து, பலதரப்பட்ட திரைப்பட ஆர்வலர்கள், விமர்சகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து சுதந்திரமான திரைப்பட விழாவை தொடங்க முயற்சித்தனர். 1938-ல் அப்போதைய பிரான்ஸ் நாட்டின் கல்வி மற்றும் கலைக்கான அமைச்சரான ஜீன் ஜே (Jean Élie Paul Zay )-வால் முன்மொழியப்பட்டு 1939-ல் கேன்ஸ் நகரில் ”சர்வதேச திரைப்பட விழா” என்னும் பெயரில் தொடக்க விழா நடைபெற்றது.
தொடக்க விழா நடைபெற்றது. ஆனால், திரைப்பட விழா நடைபெற்றதா என்றால்? இல்லை. ஏன் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.