HBD Bharathiraja: ’என் இனிய தமிழ் மக்களே’ .. பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு இன்று 82-வது பிறந்தநாள்..!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும், ‘இயக்குநர் இமயம்’ என்றழைக்கப்படுபவருமான பாரதிராஜா, இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும், ‘இயக்குநர் இமயம்’ என்றழைக்கப்படுபவருமான பாரதிராஜா, இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா
பொதுவாக ஒரு வட்டத்துக்குள் முடங்கி கிடப்பவர்களை மீட்டுக் கொண்டுப் போக யாரேனும் ஒருவர் வருவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும். அப்படி, தமிழ் சினிமா சினிமாவுக்குள் வாழ்க்கையையும், வாழ்வியலையும் சொன்ன இயக்குநர்கள் ஏராளம். ஆனால் இவை அனைத்து நடந்தது ஸ்டூடியோவுக்குள். இதனை மாற்றி வெள்ளித்திரையில் கிராமத்தையும், வெள்ளந்தி மனிதர்களையும், வட்டார மொழியையும் அதன் தன்மைக்கே உரித்தாக கொண்டு வந்தவர் என்றால் அது பாரதிராஜா தான்.
அவரின் முதல் படமாக வெளியானது தான் ‘16 வயதினிலே’. சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என்ற பெயர்கள் தொடங்கி, கோமணம் கட்டி கமல் நடித்தது வரை நம்மை சுற்றி நடப்பது போன்ற காட்சிகள் ரசிகர்கள் அப்படத்தை கொண்டாட காரணமாக அமைந்தது. கதையும், அது சொல்லப்படும் விதம் என தனித்து தெரிய தொடங்கினார் பாரதிராஜா.
அடுத்தாக ‘கிழக்கே போகும் ரயில்’.சாதிப்பாகுபாடு, ஆணவ அவமானங்கள், ஊர்க்கட்டுப்பாடு, மூடநம்பிக்கை என அத்தனையும் இறக்கி நம் இதயத்தை ரயிலில் ஏற்றி விட்டார். இப்படி முதல் 2 படங்களில் வெள்ளந்தி மனங்களை பேசியவர், 3வது படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் க்ரைம் த்ரில்லர் பாணியிலான கதையை உருவாக்கி மிரள வைத்தார்.
இதன் பின்னர் புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, தாவணி கனவுகள், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தாஜ்மகால் என ‘இயக்குநர் இமயம்’ என்ற அடைமொழிக்கு அடையாளமாக காலத்தால் அழிக்க முடியாத படங்களை எடுத்தார்.
நடிப்பில் ரசிக்க வைத்தவர்
தன்னுடைய படங்களில் அவ்வப்போது தலைகாட்டிய பாரதிராஜா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, குற்றம் குற்றமே, ஈஸ்வரன், ராக்கி, திருச்சிற்றம்பலம், வாத்தி, திருவின் குரல் என பல படங்களில் நடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்து, ‘நமக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே’ என நினைக்க வைத்தார்.
தொடர்ந்து சின்னத்திரைக்கு வந்த பாரதிராஜா, தெக்கத்திப் பொண்ணு சீரியலை இயக்கினார். இதி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிடியில் வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி பாடத்திலும் ஒரு எபிசோடை இயக்கியிருந்தார். இப்படி காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு, தமிழ் சினிமாவின் ஐகான் ஆக விளங்கும் பாரதிராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!