(Source: ECI/ABP News/ABP Majha)
9 Years of Sathuranga Vettai: 'ஒருத்தரை ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டனும்' .. 9 ஆண்டுகளை நிறைவு செய்த சதுரங்க வேட்டை..!
தமிழ் சினிமாவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘சதுரங்க வேட்டை’ படம் இன்றோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘சதுரங்க வேட்டை’ படம் இன்றோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஹெச்.வினோத்தின் முதல் படம்
இயக்குநர், நகைச்சுவை நடிகர் என பன்முகம் கொண்ட சமீபத்தில் மறைந்த மனோபாலா தான் சதுரங்க வேட்டை படத்தை தயாரித்தார். இந்த படத்தின் மூலமாக ஹெச்.வினோத் இயக்குநராக அறிமுகமானார். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ், இஷாரா, இளவரசு என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் கதை
நமது அன்றாட வாழ்வில் மோசடி மூலம் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை விடவும், மக்களின் பேராசை எப்படி அந்த மோசடிக்குள் மக்களை கொண்டு சேர்க்கிறது என்பதே இப்படத்தின் ஒன்லைன் ஆகும். சமூகத்தால் விரட்டப்பட்ட சிறுவன், சமூகத்தை ஏமாற்றும் நபராக உருவாவதை மிகவும் தெள்ளத்தெளிவாக காட்டியிருந்தார் ஹெச்.வினோத். மக்களை ஏமாற்றும் நட்டி, ஒரு கட்டத்தில் தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் சிக்குகிறார். கர்ப்பிணி மனைவி பிணையில் இருக்கும் நிலையில் அடுத்து என்ன பண்ணப் போகிறார் என்பதே திரைக்கதையாக விரிந்தது.
காட்சிக்கு காட்சி கைத்தட்டல்கள்
மண்ணுள்ளிப் பாம்பு வியாபாரத்தில் தொடங்கும் படம், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் பிசினஸ் என தினம் தினம் நாம் பார்க்கும் மோசடிகளை காட்சிகளாக வைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். பணத் தேவை எப்படி ஒருவனை குற்றம் செய்ய தூண்டுகிறது. ஏமாற்றி பெறப்பட்ட பணம் எப்படி நிம்மதியை சீர்குலைக்கிறது என காட்சிப்படுத்திய விதம் ஒவ்வொருவர் மனதையும் உலுக்கியது.
சாட்டையை சுழற்றிய வசனங்கள்
ஊழல் செய்யும் நட்டிக்கு காந்தி பாபு என்ற பெயரே பலருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ‘உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்கு எதுவுமே இல்லைனு இருந்திருக்கீங்களா?’, ‘குற்ற உணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை’, ‘நான் யாரையும் ஏமாத்தல..ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்’, தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்திடுவேன்னு சொல்லி ஓட்டு வாங்குவாங்க.. ஆனா மாறவே இல்ல. இது ஏமாத்து இல்லையா?’, ‘ஒவ்வொரு பொய்லயும் கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும்’ என ஒவ்வொரு வசனமும் பளீர் ரகங்களாக இருந்தது. ‘ஒருத்தரை ஏமாத்தனும்னா அவனது ஆசையை தூண்டனும்’, 'நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்’ என எழுதப்பட்ட வசனங்கள் வேற லெவல்.
அறிமுக நாயகி இஷாராவும் தனக்கு கிடைத்த கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். என்னதான் இதற்கு முன்னால் பல படங்களில் நடித்திருந்தாலும் நட்டிக்கு இப்படம் ஒரு அடையாளமாக மாறிப்போனது.கடைசியில் ஏமாற்றியவனும், ஏமாறுபவனுக்கு ஒரே மாதிரி மனநிலை தான் என சொல்லி, அன்பே சிறந்த ஆயுதம் என சொல்லி லைக்ஸ் அள்ளியது சதுரங்க வேட்டை...!