CM Stalin On Marimuthu:"மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாரிமுத்து” முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி..!
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
CM Stalin On Marimuthu: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்தார் மாரிமுத்து:
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று (செப்டம்பர் 8) காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:
மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார்.
மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உதயநிதி இரங்கல்:
இதனை அடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.