Enjoy Enjaami Arivu: “எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்காக 6 மாசம் தூங்கல; என் உழைப்பு” - இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்ட அறிவு!
Enjoy Enjaami Arivu: ’எஞ்சாய் எஞ்சாமி’ அறிவு இன்ஸ்டாகிராம் பதிவு.
’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல்- கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நாம் அனைவரின் ப்ளேலிஸ்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. இந்தப் பாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். இசை, பாடல் வரிகள் என எல்லாமே பலம்தான். உடல் சிலிக்க வைக்கும் அளவுக்கு இசையும், வரிகளும் அமைந்திருக்கும். இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்படிருப்பது அற்புதமாக இருக்கும். கலையின் மூலம் அரசியலையும் பாதிக்கப்படுவர்களின் சோகத்தையும் நம்முள் கடத்திச் சென்றிருக்கும்.
பூர்வக்குடி மக்களை நிலமற்றவர்களாக மாற்றிய அரசியல் பற்றி பேசியிருக்கும் இந்தப் பாடல் வரிகள் வேதனையை உணர்வுப்பூர்வமாக சொல்லும்படி அமைந்திருக்கும். இந்தப் பாடலை அறிவு எழுதியது. இந்த பாடலின் ஆன்மாவே அவருடைய வரிகள் என்றே சொல்லலாம். அவ்வளவு அழுத்தமாக ஒரு விஷ்யத்தைச் சொல்லி சென்றிருப்பார். அரக்கோணத்தைச் சேர்ந்த அறிவு ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ என்ற இயக்குநர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவின் மூலம் புகழ்பெற்றவர்.
எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் யூடியூபில் 42 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இன்னும் இதற்கான வரவேற்பும், இந்தப் பாடல் மீதான கிரேசும் குறையவில்லை.
இப்பாடல் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் அரங்கேற்றப்பட்டது. அதில், இப்பாடலை தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். இந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பாடிய தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடினர். ஆனால் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதிய அறிவு இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அறிவு இன்ஸ்டாகிராம் பதிவு:
’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு எனக்கு யாரும் டியூன் தரவில்லை; அந்தப் பாடலில் உள்ள வார்த்தைகளில் ஒன்றில் கூட பிறர் சொன்னது இல்லை,. ’எஞ்சாய் எஞ்சாமி’ - நான் மியூஸிக் கம்போஸிங் செய்து, பாடல் வரிகளை எழுதி, பாடி, அந்தப் பாடலிலும் பர்ஃபாம் செய்திருந்தேன். இதற்காக ஆறு மாதங்கள் உறங்கமால் இருந்திருக்கிறேன். இப்போது இருக்கும் ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு பின், என்னுடைய உறங்காத இரவுகளின் உழைப்பு இருக்கிறது.
இது வெற்றிகரமான டீம் ஒர்க் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதில் எல்லாருடைய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் ‘வள்ளியம்மாளின் வரலாறு அல்லது நிலமற்ற டீ உற்பத்தி செய்யும் அடிமைகளாய் இருந்த என் மூத்த குடிகளின் வரலாறு இல்லை என்றாகிவிடாது, அல்லாவா? நான் எழுதும், உருவாக்கும் ஒவ்வொரு பாடலிலும் அடிமைப்படுத்தப்பட்ட தலைமுறையின் ஈரம் இருக்கும்; அதன் காயங்கள் இருக்கும். அதுபோன்றதுதான் ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலும்.
இந்த மண்ணுக்கென பத்தாயிரம் நாட்டுப்புற பாடல்கள் இருக்கின்றன; இருக்கும். அவைகள் பூர்வகுடிகளின்/ முன்னோர்களின் வாழ்வு, வலி, காதல், அவர்களின் மூச்சு உள்ளிட்டவற்றை தாங்கி நிற்கும். முக்கியமாக, அவர்கள் வாழ்தலை இவ்வுலகிற்கு உணர்த்தும்படியாக அமைந்திருக்கும். இவை ஒரு அழகான பாடல் மூலம் உங்களிடம் பேசுகின்றன. ஏனெனில், நாம் அனைவரும் இரத்தமும் வியர்வையும் சிந்திய தலைமுறையிலிருந்து கலை வடிவத்தை விடுதலைக்கான மெலடியாக மாற்றி கொண்டோம். நம் முன்னோர்களின் மாண்பை பாடல்கள் மூலம் நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்; பாடல்கள் மூலம் அவர்களின் மாண்பை தாங்கி நிற்கிறோம். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களிடம் உள்ள பொக்கிஷத்தை யார் வேண்டுமாலும் தட்டிப் பறிக்கலாம்,. ஆனால், விழித்திருக்கும்போது, உங்களிடமிருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. ஜெய் பீம்!
உண்மை என்றும் வெல்லும்!
என்று உருக்கமான பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் #enjoyenjaami #appropriationart என்ற ஹேஷ்டேக் குறிப்பிட்டு இந்தப் பதிவை பகிந்துள்ளார் அறிவு.
அறிவு திடீரென இப்படி ஒரு பதிவிடுவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.