Director Shankar: வந்தது இனோவா கார்.. போனது ஓலா கேப்.. இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் விசாரணை..!
பிரபல இயக்குநரான ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநரான ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 மணிநேரம் தீவிர விசாரணை
இயக்குநர் ஷங்கர் நேற்று அவரது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்ற குற்ற்சாட்டின் அடிப்படையில் ஷங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அதிகாரிகள் வழக்கு தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை என்றும் விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாடகைக் கார்
அதிகாரிகளிடம் ஷங்கர் தன் தரப்பு வாக்குமூலத்தை கூறியதாக தெரிகிறது. இதனிடையே இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஊடகத்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கூடினர். இதனையறிந்து கொண்ட ஷங்கர் ஊடகத்துறையினரின் கண்ணில் படாமல் செல்வதற்கு
அலுவலகத்திற்கு வந்த இனோவா காரை தவிர்த்து, அலுவலகத்தின் பின்புறம் வாடகை காரை வரவழைத்து பின்புற வாசல் வழியாக வெளியேறி சென்றுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் இயக்குநர் ஷங்கரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்கு பேர் போன இயக்குநர் ஷங்கர். ஜென்டில் மேன் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து முதல்வன், அந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் படத்தை இயக்கி வந்தார். இந்தநிலையில் படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா காரணமாகவும் ஷங்கருக்கு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஷங்கர் மீது லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தில் கமிட் ஆனார் ஷங்கர். அந்த படம் தொடர்பான வேலைகளை கவனித்து வரும் அவர் அடுத்ததாக இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்தியன் படத்தை வைத்து ரீமேக் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.