Drums Sivamani : ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர் படம்.. நீண்ட நாட்களுக்குப் பின் இசையமைப்பாளராக களமிறங்கும் டிரம்ஸ் சிவமணி..!
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் டிரம்ஸ் சிவமணி இசையில் ரொமான்டிக் கிரைம் த்ரில்லர் பாணியிலான படம் தயாராக உள்ளது
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் டிரம்ஸ் சிவமணி இசையில் ரொமான்டிக் கிரைம் த்ரில்லர் பாணியிலான படம் தயாராக உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தை தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கிறார். இந்த படத்தில் முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
கிராமத்து பின்னணியில், மாறுபட்ட ரொமான்டிக் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படம், நிச்சயம் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று இனிதே தொடங்கியது.படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு இதுவரை பெயரிடப்படாத நிலையில் ஒளிப்பதிவாளராக பிரகாஷ், படத்தொகுப்பாளராக அகமது, சண்டை பயிற்சியாளராக ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுளனர். உலகப் புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழில் பல படங்களில் ட்ரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, அதர்வா நடித்த கணிதன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதேபோல் இந்தியில் தேஹாதி டிஸ்கோ படத்திலும் அவர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.