Vijayakanth: சாதிய வர்க்கத்துக்கு எதிரா திமிரா சண்டை செய்தவர்.. விஜயகாந்துக்கு பா.ரஞ்சித், வெற்றிமாறன் இரங்கல்!
சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு கதாநாயகனாக இருந்தார் என்று மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்
விஜயகாந்த் மறைவு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்பு தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . விஜயகாந்தை ஆதர்சமாக கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
விஜயகாந்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்து இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள். விஜயகாந்த் உடன் திரையில் இணைந்து நடித்த நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் , இயக்குநர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் என அனைவரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் விஜயகாந்த் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார்.
நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோதான்
#WATCH | Chennai: Director Vetrimaran arrives at the DMDK office to pay tribute to DMDK captain Vijaykanth who passed away yesterday pic.twitter.com/QJi52AjbqQ
— ANI (@ANI) December 28, 2023
விஜயகாந்த் குறித்து பேசிய வெற்றிமாறன் “ விஜயகாந்த் சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகனாக வாழ்ந்துள்ளார். சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் அவர் தாக்கம் செலுத்தி இருக்கிறார். நாம் அவரை நேரில் சந்தித்திருக்கிறோமோ இல்லையோ ஏதோ ஒரு வகையில் அவரால் இன்ஸ்பைர் ஆகியிருப்போம் . அப்படியான ஒரு தலைவரை நாம் இழந்திருக்கிறோம். அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கும் , தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. இந்த நேரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த் அவர்களின் ஆசை என்னவாக இருந்ததோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
பா ரஞ்சித்
“என்னுடைய இளம் பருவத்தில் ரொம்ப அதிகம் ரசித்துப் பார்த்த ஒருவர் விஜயகாந்த், எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். அவருடைய அரசியலும் தமிழ் திரையுலகின் அவருடைய பலமும் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது. ரொம்ப ஸ்ட்ராங்கா தன்னை வெளிப்படுத்தியவர். சாதிய வர்க்கத்திற்கு எதிராக ரொம்ப திமிரா நின்னு சண்ட செஞ்சாரு. அவரோட இறப்பை ஒரு மிகப்பெரிய இழப்பாக நான் பார்க்கிறேன்” என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்
இறுதி அஞ்சலி
விஜயகாந்த் உடல் இன்று மாலை 5 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.