Vetrimaaran: சூரி போன்ற நடிகர் கிடைப்பது இயக்குநர்களுக்கு வரப்பிரசாதம்.. புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்!
சூரி மாதிரியான ஒரு நடிகர் கிடைப்பது இயக்குநர்களுக்கு வரப்பிரசாதம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
கருடன்
விடுதலை படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 15 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது கருடன். கருடன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இப்படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் வெற்றிமாறன் கருடன் படம் ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு படத்திற்காக சூரி தன்னை டெடிகேஷனுடன் வைத்திருப்பது குறித்து அவர் பேசினார்.
சூரி மாதிரியான ஒரு நடிகர் கிடைப்பது வரப்பிரசாதம்
நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் "கருடன் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் துரை செந்தில் குமாரின் உழைப்பு ஒரு முக்கிய காரணம். இந்தக் கதைக்கு அவர் நேர்மையாக இருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார் நடிக்க சம்மதித்தது சூரியின் மீது அவருக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது. சசிகுமார் இந்தப் படத்தில் நடிக்க மாட்டார் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். அவரது கேரக்டர் நன்றாக இருந்தாலும் அவர் இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அவர் நடித்தால் அது படத்திற்கு பலம் தான் என்று தான் இயக்குநரிடம் சொன்னேன்.
ஆனால் ஆச்சரியப்படும் வகையில் சசிகுமாருக்கு அவரது கதாபாத்திரம் ரொம்பப் பிடித்து அவர் தனக்காக இந்தப் படத்தில் நடிக்க வந்தார். அது சூரிக்கும் பெரிய பலமாக அமைந்தது. சூரியை பொறுத்தவரை தன்னை நம்பும் இயக்குநருக்கு தன்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். விடுதலை படத்தில் நான் 10 அடியில் இருந்து குதிக்க சொன்னால் 15 அடியில் இருந்து குதிக்கிறேன் என்பார். அந்தப் படத்தில் அவருக்கு கையில் தசை முறிவு ஏற்பட்டது. கொஞ்ச நாள் பிரேக் எடுத்துவிட்டு நான் வரச் சொன்னேன்.
ஆனால் இப்போது விட்டால் அடுத்து நான் எப்போது கூப்பிடுவேன் என்று அவருக்கு பயம். அதனால் அதே காயத்துடன் நடித்தார். அதே காயத்துடன் கருடன் படத்தின் டீசர் ஷூட்டில் நடித்து இன்னும் மோசமாக்கிக் கொண்டார். ஒரு இயக்குநருக்கு இப்படிபட்ட ஒரு நடிகருடன் வேலை செய்வது என்பது ஒரு சந்தோஷமான அனுபவம்” என்று வெற்றிமாறன் தெவித்துள்ளார்.