Vetrimaaran: "சினிமாவுக்கு நல்லதல்ல" ஓ.டி.டி.யில் அன்னபூரணியை நீக்கியதற்கு வெற்றிமாறன் கடும் கண்டனம்!
ஓ.டி.டி. தளத்தில் அன்னபூரணியை நீக்கியது சினிமாவிற்கு நல்லதல்ல என்று இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![Vetrimaaran: Director Vetrimaaran open talks about Nayanthara's annapoorani movie removed in nxteflix ott Vetrimaaran:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/1c8d375a1686c8d307f166d46e28ff8b1705373217085572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓ.டி.டி. தளங்கள்:
இந்தியாவில் ஓடிடி தளங்களில் பங்கு என்பது கணிக்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து விட்டது. நெட்பிளிக்ஸ், அமேசான்,ஜீ5 , ஹாட் ஸ்டார், சோனி லைவ், சன் நெக்ஸ், ஆஹா என பல ஓடிடி தளங்கள் பொதுமக்களின் வசதிக்கேற்ப மாதம் மற்றும் ஆண்டு சந்தா அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து சேவையை வழங்கி வருகிறது.
முன்னெல்லாம் ஒரு படம் வருகிறதென்றால் எந்த தியேட்டரில் வருகிறது என பார்க்கும் காலம் போய், எந்த ஓடிடி தளத்தில் வருகிறது என கேட்கும் அளவுக்கு வந்து விட்டது. அப்படிப்பட்ட ஓடிடி தளத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
அன்னபூரணி படம் நீக்கம்
கடந்தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடிகை நயன்தாராவின் நடிப்பில் ‘அன்னபூரணி’ படம் வெளியானது. இது அவரின் 75வது படமாகும். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து அன்னபூரணி படத்தைத் தயாரித்த நிலையில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் ஒரு புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
இந்த படம் தியேட்டரில் ஓடும் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது. ஆனால் ஜனவரி முதல் வாரம் ஓடிடி தளத்திற்கு வந்தபோது பிரச்சினை வெடித்தது. இதில் இஸ்லாமிய இளைஞராக ஜெய் நடித்திருப்பார். அவர் பிராமண பெண்ணான நயன்தாரா அசைவம் சாப்பிட தயங்கும் இடத்தில் ராமர் உள்ளிட்ட கடவுள்கள் அசைவம் சாப்பிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, உணவு சுதந்திரம் பற்றி பேசியிருப்பார். இந்த காட்சியை நீக்க சொல்லியும், நயன்தாரா மீதும் மும்பை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு ஜீ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மேற்குறிப்பிட்ட காட்சிகளை மறு படத்தொகுப்பு செய்வது குறித்து தாங்கள் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், அதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி படத்தினை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தது.
இயக்குநர் வெற்றிமாறன் கருத்து
இந்நிலையில் அன்னபூரணி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடி தளங்களுக்கும் பொருந்தும். ஆனால் தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை பிற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)