இவ்வளவு சீக்கிரமாவா? 2கே லவ் ஸ்டோரி படத்தை 38 நாட்களில் எடுத்து முடித்த சுசீந்திரன்!
சுசீந்திரன் இயக்கியுள்ள 2 கே லவ் ஸ்டோரி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 38 நாட்களில் முடித்து படக்குழு அசத்தியுள்ளது. படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சிம்புவை வைத்து கடைசியில் ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இந்த நிலையில், சுசீந்திரன் தற்போது இயக்கியுள்ள 2கே லவ்ஸ்டோரி.
38 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு:
இன்றைய தலைமுறையினரின் காதல் மற்றும் அவர்களின் நட்பு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பெயர் பெற்றுள்ளவர்களில் சுசீந்திரனும் முக்கியமானவர். தற்போது இயக்கியுள்ள 2K லவ் ஸ்டோரி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 38 நாட்களில் படக்குழுவினர் முடித்துள்ளனர்.
திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழு வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை சுசீந்திரன் அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் நாயகனாக புதுமுகம் ஜெகவீர் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
விரைவில் வெளியீடு:
சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.
சுசீந்திரன் மற்றும் இமான் கூட்டணி 10வது முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிட்டி லைட் பிக்சர்ஸ் பட நிறுவன சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியாகு படத்தொகுப்பு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சுசீந்திரன் இயக்கிய எந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறாத சூழலில், இந்த படம் இன்றைய தலைமுறையினரை வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ளதால் இந்த படம் இளைஞர்களைச் சென்றடையும் என்று படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.