Rajinikanth: குஷ்பு சிபாரிசால்தான் ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததா? சுந்தர் சி சொன்ன உண்மை!
குஷ்பு செய்த சிபாரிசால்தான் ரஜினிகாந்தின் பட வாய்ப்பு கிடைத்தது என்ற கருத்துக்கு சுந்தர் சி அளித்த விளக்கத்தை கீழே காணலாம்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
குஷ்புவால்தான் ரஜினி பட வாய்ப்பா?
அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். சுந்தர் சி 1997ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர். தனது 29 வயதிலே அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை தந்தவர்.

ஆனால், அதன்பின்பு அவர் ரஜினிகாந்துடன் ஒரு முறை கூட இணையவில்லை. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி ரஜினிகாந்தை இயக்குகிறார். ரஜினிகாந்தை வைத்து சுந்தர் சி அருணாச்சலம் படத்தை இயக்கியபோது, அவருக்கு அந்த வாய்ப்பு குஷ்பு மூலமாக கிடைத்ததாகவே ஒரு தகவல் பரவி வந்தது.
சுந்தர் சி சொன்ன பதில் என்ன?
அப்போது, அதாவது 1996ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வெளியான வார இதழில் சுந்தர் சி இதற்கான பதிலை அளித்திருந்தார். அந்த பேட்டியில் சுந்தர் சி.யிடம் அருணாச்சல வாய்ப்பு குஷ்பு மூலமாகத்தான் கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது. அதற்கு சுந்தர்.சி, இது என்னை காயப்படுத்துற கேள்வி. ஒருத்தன் அவன் திறமையால முன்னுக்கு வந்தா இங்கே ஒத்துக்கவே மாட்டாங்களா?
நரசிம்மராவ் வற்புறுத்திக் கூப்பிட்டும் அரசியலுக்கு வராதவர் ரஜினி சார். தன்னோட விஷயங்கள்ல அவர் ஸ்ட்ரிக்ட். ஒரு நடிகை சிபாரிசு செய்ததால் டைரக்ட் பண்ண சான்ஸ் தருவாரா என்ன? என்று கேட்டிருப்பார்.

ஏனென்றால், முறை மாமன் படம்தான் சுந்தர்.சி-யின் முதல் படம். அந்த படத்தில் நாயகியாக குஷ்பு நடித்திருப்பார். அந்த படத்தின்போதே இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இது அப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு பேசுபொருளாக இருந்ததால், சுந்தர் சி-க்கு குஷ்பு சிபாரிசால் பட வாய்ப்பு கிடைத்ததாக ஒரு தகவல் இருந்தது. பின்னர், குஷ்பு - சுந்தர் சி இடையே 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது.
ப்ளாக்பஸ்டர் இயக்குனர்:
அருணாச்சலம் படத்தை இயக்குவதற்கு முன்பே முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என ப்ளாக்பஸ்டர் படங்களை சுந்தர்.சி இயக்கியிருப்பார். குறிப்பாக, உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஆகும்.
கிரேஸி மோகன் வசனத்தில் தேவா இசையில் இந்த படம் உருவாகியிருந்தது. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருப்பார். 1997ம் ஆண்டே இந்த படம் 32 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இந்த படத்தில் ரஜினியுடன் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வடிவுக்கரசி, ரகுவரன், விசு, செளந்தர்யா, ரம்பா என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். செந்தில், ஜனகராஜ் நகைச்சுவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக இன்றும் உலா வருபவர் சுந்தர்.சி. இதன் காரணமாகவே சுந்தர் சி-யை இந்த படத்திற்கு இயக்குனராக கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளார். உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, வின்னர், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை, மதகஜராஜா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.




















