8 years of Baahubali : 'பாகுபலி.. பாகுபலி’ ... எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி ஊரே கொண்டாடிய படம்.. 8 ஆண்டுகள் நிறைவு..!
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்துள்ள எஸ்.எஸ். ராஜமௌலியின், ‘பாகுபலி - தி பிகினிங்’ படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்துள்ள எஸ்.எஸ். ராஜமௌலியின், ‘பாகுபலி - தி பிகினிங்’ படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான படம்
2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி 'பாகுபலி: தி பிகினிங்' படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர்.. இல்லை இல்லை..வாழ்ந்திருந்தனர் என சொல்லலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியானது என்றால் யாராலும் நம்ப முடியாது.
காட்சிக்கு காட்சி பிரமாண்டம்
நான் ஈ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமாகி இருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி. அப்படியான நிலையில் அவரின் படம் என்பதால் என்டெர்டெயின்மென்ட் கேரண்டீ என தியேட்டருக்குள் நுழைந்த மக்களுக்கு காட்சிக்கு காட்சி பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னார். குறிப்பாக பல்வாள்தேவன் (ராணா) சிலையை இழுக்க மக்கள் நிலைதடுமாறு போது பிரபாஸை பார்த்த தொழிலாளி, ‘பாகுபலி.. பாகுபலி’ என பெயரை உச்சரிப்பார். அதைக்கேட்டு மக்கள் அனைவரும் பாகுபலி பெயரை சொல்ல ராணா டென்ஷனாவார். நமக்கே யாருப்பா அந்த பாகுபலி என்ற எதிர்பார்ப்பு எழுந்து விடும்.
படத்தின் கதை
மகிழ்மதியின் அரசன் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்) தான் தன்னுடைய அப்பா என பழங்குடியின தம்பதியினரிடம் வளரும் மகேந்திர பாகுபலிக்கு (இன்னொரு பிரபாஸ்) தெரிய வரும். அதேசமயம் தனது அப்பா கொல்லப்பட்டார் என்ற செய்தியும், அம்மா சிறை பிடிக்கப்பட்டுள்ள தகவலும் கண்டு அதிர்ச்சியடைகிறார். ஆனால் அரசன் அமரேந்திர பாகுபலி தன்னால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை கட்டப்பா (சத்யராஜ்) தெரிவிக்கிறார். அவர் ஏன் பிரபாஸை கொன்றார்? என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிவுக்கு வரும். இரண்டு ஆண்டுகளாக பின் 2017 ஆம் ஆண்டு இந்த கேள்விக்கு விடை கிடைத்தது. பாகுபலி 2 (தி கன்க்ளூஷன்) வெளியாகியிருந்தது.
இந்திய சினிமாவின் மணிமகுடம்
இந்திய சினிமாவின் மணிமகுடம் என கொண்டாடப்படும் பாகுபலி படத்தின் 2 பாகங்களும் ரசிகர்களிடம் இன்றளவும் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. அதேசமயம் முதல் பாகத்தை விட 2ஆம் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் படங்கள் இந்திய சினிமாவில் பேன் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த பாகம் ரூபாய் 600 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. மேலும் தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், அதிக வசூல் செய்த டப்பிங் படம் என ஏகப்பட்ட சாதனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.