Manjummel Boys: குணா குகையில் இருந்த சமாதி.. மிரண்டு போன கமல், சந்தானபாரதி!
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியானது.இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
![Manjummel Boys: குணா குகையில் இருந்த சமாதி.. மிரண்டு போன கமல், சந்தானபாரதி! Director Santhana Bharathi Appreciated Manjummel Boys Team and shared his memories with guna caves Manjummel Boys: குணா குகையில் இருந்த சமாதி.. மிரண்டு போன கமல், சந்தானபாரதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/01/567ca0a2cb1f619a04311421417f0a321709260656403572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குணா குகையை மையப்படுத்திய மஞ்சுமெல் பாய்ஸ் படம் தனக்கு ரொம்ப பிடித்து இருந்ததாக இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
பாராட்டைப் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ்
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியானது. சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் சௌபின் ஷாஹிர் , ஸ்ரீநாத் பாசி , பாலு வர்கீஸ் , கணபதி எஸ். பொதுவால் , லால் ஜூனியர் , தீபக் பரம்போல் , அபிராம் ராதாகிருஷ்ணன் , அருண் குரியன் , காலித் ரஹ்மான் , சந்து சலீம்குமார், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006 ஆம் ஆண்டு நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம் இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தின் காட்சிகள் மற்றும் கண்மணி அன்போடு பாடல் மிகச்சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது. இதனால் பலரும் 1991 ஆம் ஆண்டு வெளியான கமலின் குணா படத்தை தேடி தேடி பார்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் குணா படத்தின் இயக்குநரான, நடிகர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றி பேசியுள்ளார்.
நினைவுகளை பகிர்ந்த சந்தான பாரதி
அதில், “நான் ரெண்டு நாள் முன்னாடி தான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. இந்த படம் பார்க்கும்போது தான் குணா படத்தின் ஆபத்து எந்தளவு என்பது தெரிய வருகிறது. நாங்க குணா படம் எடுக்கும்போது அதைப்பற்றி யாருக்குமே அந்தளவு தெரியவில்லை என நினைக்கிறேன். இந்த படத்தில் காட்டும்போது இவ்வளவு ரிஸ்க் ஆன இடமா அது என ரசிகர்களுக்கு புரிய வந்துள்ளது. தியேட்டரிலேயே 2, 3 பேர் என்னிடம் எப்படி குணா படம் அந்த இடத்தில் போய் எடுத்தீர்கள் என கேட்டார்கள்.குறிப்பாக கடைசி காட்சியில் கண்மணி அன்போடு பாடல் வரும் இடத்துக்கு மொத்த தியேட்டரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். எனக்கு அதைப்பார்த்து உடம்பு சிலிர்த்து கண்கலங்கி விட்டேன். 34 வருஷத்துக்கு பிறகு ஒரு படத்தை கொண்டாடுகிறார்கள் என்றால் அதன் மதிப்பு எந்தளவு இருக்கிறது என்பதை பாருங்கள். கமல்ஹாசனும் படத்தை பார்த்து பாராட்டி விட்டது.
குணா படத்தில் வரும் மாதிரி தான் பண்ணியிருக்காங்க. ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் சூப்பரா வந்திருக்கு. 900 அடிக்கு குழி அந்த இடத்தில் இருக்கிறது. என்னை கூட்டிப்போன கைடு அங்கங்க குழி இருக்கும். பார்த்து காலை வைங்க. உள்ளே போனிங்கனா நேரா வத்தலக்குண்டுக்கே போகும் அளவுக்கு ஆழம் அதிகம் என எச்சரித்தார். குணா படத்துக்காக லோகேஷன் பார்க்க நானும், கமலும் போயிருக்கும்போது அங்கே ஒரு சமாதி இருந்தது. என்னவென்று கேட்டதற்கு, இங்கே ஒருத்தர் விழுந்து இறந்துட்டாருன்னு கைடு சொன்னாரு. அதன்பிறகே நாங்கள் எச்சரிக்கையாகவே சென்றோம். அப்ப எங்களுக்கு ரிஸ்க் தெரியவில்லை. இப்ப மஞ்சுமெல் பாய்ஸ் பார்க்கும்போது புரியுது” என சந்தான பாரதி கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)