Actor Vijay: ’என் மகன் விஜய்க்காக இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டேன்...யாரும் முன்வரவில்லை” - நினைவுகளைப் பகிர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான இயக்குநர் தங்கர்பச்சான் மீண்டும் “கருமேகங்கள் கலைகின்றன” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய்க்காக வாய்ப்பு கேட்டு பாரதிராஜாவிடம் சென்ற கதையை அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கருமேகங்கள் கலைகின்றன
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான இயக்குநர் தங்கர்பச்சான் மீண்டும் “கருமேகங்கள் கலைகின்றன” என்ற படத்தை இயக்கியுள்ளார். வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன். எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தது தொடர்பாக தெரிவித்தார்.
பணம் சம்பாதித்துள்ளேன்.. பெயர் சம்பாதிக்கவில்லை
அவர் பேசுகையில், “சினிமாவுல ஏதோ ஒரு இடத்துக்கு வரணும்ன்னு சென்னைக்கு ஓடி வந்தவங்க இயக்குநராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இன்னைக்கு நடிகராகவும் இருக்கிறாங்க. அதாவது நாம ஒரு விஷயத்தை நேசித்தோம் என்றாலும், அன்பு வைத்தோம் என்றாலும் அது நம்மை விடாது.அந்த மாதிரி சினிமாவை நாம் நேசித்ததால் அது ஏதோ ஒரு உருவத்தில் நம்மை பிடித்து வைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அந்த சினிமா துறைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நிறைய படங்கள் இயக்கி பணம் சம்பாதித்துள்ளேன். ஆனால் தங்கர்பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவரை மாதிரி இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான முயற்சி எடுத்ததே இல்லை. எதற்கு இந்த விஷ பரீட்சை என நினைப்பேன்.
தங்கர்பச்சான் ஊரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வந்து கலப்படம் இல்லாத இயற்கையான படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்க எல்லாம் ஸ்டோரி, ஸ்க்ரீன்பிளே டைரக்ஷன் என பெயருக்கு முன்னால் போடுவோம். ஆனால் அவர் என்ன போட்டிருக்கிறார் என பாருங்கள். உரையாடல் என போட்டிருக்கிறார். இது நிறைய பேருக்கு புரியவே புரியாது.
அதைப் பற்றி தங்கர்பச்சான் கவலைப்படுவதில்லை. அவர் தமிழை நேசித்து பண்பாடு சார்ந்த படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இடையில் சில தோல்விகள் சறுக்கல்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நான் இப்படித்தான் நான் இப்படித்தான் படம் எடுப்பேன். அதை நீங்கள் பார்க்கத் தான் வேண்டும் என சொல்லும் ஒரு இயக்குநர் தங்கர்பச்சான்.அவர் இயக்கத்தில் நான் இந்த வயதில் இந்த படத்தில் நடித்திருப்பது ரொம்ப பெருமையான விஷயம்.
பாரதிராஜாவுடனான நட்பு
நானும் பாரதிராஜாவும் ஒரே மாவட்டத்திலிருந்து ஒரே காலகட்டத்தில் சினிமா வந்தவர்கள். முதலில் பாரதிராஜா இயக்குநராக நான் அவரிடம் உதவி இயக்குநராக சேர நினைத்தேன். உன்னை எல்லாம் உதவி இயக்குநராக வைத்துக் கொள்ள முடியாது. நண்பர்களாகவே இருப்போம் என சொல்லிவிட்டார். அதில் எனக்கு கொஞ்சம் கோபம்.
நானும் இயக்குநர் ஆகி காட்டுகிறேன் என ஏதோ ஒரு வகையில் இயக்குநராகியும் விட்டேன். என் மகன் விஜய் நடிகராக ஆசைப்பட்டபோது நான் ஆல்பம் ஒன்றை ரெடி செய்து கொண்டு பாரதிராஜாவை சந்தித்தேன். அதற்குள் நான் கிட்டத்தட்ட ஐம்பது படங்கள் முடித்து விட்டேன். நான் விஜய்யை அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட அதே நேரத்தில் நம்மை விட பெரிய இயக்குநர் விஜய்யை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
விஜய் அறிமுகம்
90களில் பாரதிராஜா பெரிய இயக்குநர். அவரோ விஜய்யின் ஆல்பத்தை பார்த்துவிட்டு என்கிட்ட ஏன் கொண்டு வந்தாய். நீயே படம் இயக்க வேண்டியது தானே என கேட்டார். அதாவது நான் படம் பண்ண மாட்டேன் என்பதை மறைமுகமாக பாரதிராஜா சொன்னார்.
நண்பர்களாக இருந்த நாங்கள் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் இணைய வேண்டும் என நினைத்தேன். அவரிடம் உதவி இயக்குநராக சேர ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை என் மகன் விஜய் படத்தை அவர் இயக்க வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை. ஆனால் இயக்குநர் தங்கர் பச்சான் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் மூலம் அதனை நிகழ்த்தி காட்டி விட்டார்.
இந்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார் அவரிடமும் விஜய்க்காக ஆல்பம் ஒன்றை எடுத்துக் கொண்டு வாய்ப்பு கேட்டு சென்றேன். ஏனோ நல்ல இயக்குநர்கள் எல்லாம் ஆரம்பத்தில் விஜய் இயக்க மறுத்து விட்டனர். அது ஒரு வகையில் நல்லது. விஜய் என்னிடம் வந்ததால் தான் கமர்சியல் ஹீரோவாக மாறினார். அதுக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எல்லாத்தையும் ஒரு பிளான் பண்ணி தான் பண்ணுகிறார்” என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.