Ajithkumar: அஜித்தை வைத்து 2 படங்கள் எடுக்கப்போகும் ராஜகுமாரன்.. ஷாக்காகும் ரசிகர்கள்!
அஜித் ஆபீஸில் நான் பேசினேன். அவர்கள் நீங்கள் வாருங்கள், பார்க்கலாம் என தெரிவித்தார். அஜித் படத்தை தயாரிக்கக்கூடிய அளவுக்கான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என இயக்குநர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்குமாரை வைத்து நான் 2 பாகங்கள் கொண்ட ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன் என இயக்குநர் ராஜகுமாரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 2 பாகங்கள்
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜகுமாரன், ‘நீ வருவாய் என’ படத்தின் 2 மற்றும் 3ம் பாகத்தின் கதை நான் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன். அஜித்குமார் தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் சரியான கதையுடன் போய் கேட்டால் நிச்சயம் அந்த படத்தில் அவர் நடிப்பார். ஒரே நேரத்தில் அந்த இரண்டு பாகத்தையும் தொடங்குவது மாதிரி பிளான் பண்ணியிருக்கிறேன்.
2ம் பாகத்தில் அஜித்தின் காட்சிகள் குறைவாகத் தான் இருக்கும். 3ம் பாகத்தில் அவருக்கான காட்சிகள் அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் தான் அஜித் நடிக்க ஒப்புக் கொள்வார். நான் நீ வருவாய் என படம் 25 ஆண்டுகள் கொண்டாடப்பட்ட நாளில் இருந்தே இந்த படத்தின் அடுத்த பாகம் தொடர்பான பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டேன்.
அஜித் எடுக்கப்போகும் முடிவு
இப்போது இந்த தகவலை ஏன் சொல்கிறேன் என்றால், அஜித் ஆபீஸில் நான் பேசினேன். அவர்கள் நீங்கள் வாருங்கள், பார்க்கலாம் என தெரிவித்தார். அஜித் படத்தை தயாரிக்கக்கூடிய அளவுக்கான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நீ வருவாய் என படத்தைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியிடம் இன்னும் நான் அடுத்த பாகம் எடுப்பதைப் பற்றி பேசவில்லை. அந்த சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு அவர் உடன்பட வேண்டும் என்பதால் விவாதிக்கவில்லை.
நீ வருவாய் என படத்தில் அஜித் ராணுவத்தில் இருந்து வந்த மாதிரி காட்சிப்படுத்தியிருப்பேன். அதை அடிப்படையாக கொண்டு தான் அடுத்த பாகம் இருக்கும். அந்த படத்தில் அஜித் இறந்து விடுவார் என இருக்கும். ஆனால் எங்கேயும் அவரை காட்டியிருக்க மாட்டோம். அப்படி காட்ட எனக்கு விருப்பமில்லை. தேவயானி கேரக்டர் மூலமாக தான் அவர் இறந்து விட்டதாக சொல்லப்படும். ஆனால் அஜித் கேரக்டர் சாகவில்லை என்பதை என்னால் எளிதாக மாற்ற முடியும்” என கூறியுள்ளார்.
நீ வருவாய் என படம்
இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜகுமாரன், 1999ம் ஆண்டு இயக்கிய படம் “நீ வருவாய் என”. இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித்குமார், ரமேஷ் கண்ணா, விஜயகுமார், வையாபுரி, பாத்திமா பாபு, சண்முக சுந்தரம், சுவலட்சுமி, ஜெய் கணேஷ் என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இப்படம் வித்யாசமான காதல் கதையாக ரசிகர்களை கவர்ந்தது. இதில் அஜித் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















