Director rajamouli: ராமர் கையில் தேசியக் கொடி? பிரதமர் கோரிக்கையும்... ராஜமெளலி பதிவும்... புதிய சர்ச்சையும்!
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தின் டிபியை மாற்றியிருக்கிறார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தின் டிபியை மாற்றியிருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக ஊடக கணக்குகளில் மூவர்ண தேசியக் கொடியை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோரிக்கை வைத்தார். தனது 'மன் கி பாத்' உரையில், 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) என்ற இயக்கத்தை அவர் தொடங்கிவைத்தார்.
மக்களின் இயக்கமாக மாறுகிறது
அதன் படி ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுப்போம் என்றும் மோடி தெரிவித்தார். மேலும், இந்த இயக்கமானது 'ஆசாதி கா அம்ரித் மஹோத்ச'வின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட மோடி, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது என்றும் இது மக்களின் இயக்கமாக மாறுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த இயக்கத்தை தொடங்குவதற்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கிய மோடி, "நமது தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார். அவர் கோரிக்கை வைத்ததின் பேரில், அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தங்களது ப்ரொபைல் பிக்சராக தேசிய கொடியை வைத்தனர்.
ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி டிபி
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடியும்,அதனை அவர் பார்த்துக்கொண்டிருக்கும் படியான படத்தை டிபி-யாக வைத்தனர். கூடவே, ராகுல் காந்தி ‘மூவர்ணக் கொடி இந்தியாவின் பெருமை. அது ஒவ்வொரு இந்தியரின் இதயத்தில் இருக்கிறது’ என்று இந்தியில் ட்வீட் செய்திருந்தார் ராகுல் காந்தி.
இந்த நிலையில் ‘பாகுபலி’ ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் ராஜமெளலி தனது பேஸ்புக் டிபியில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி நிற்பது போன்ற புகைப்படத்தை மாற்றியிருக்கிறார்.
1920 - களில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தை மைய கருவாக வைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்கையை தழுவி இந்த்திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் வெளியான போதே, ராம்சரணின் கதாபாத்திரம் கடவுள் ராமரை தழுவியதாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதே உடையோடு ராம்சரண் தேசியக் கொடியை ஏந்தி நிற்பதைப் போன்ற போட்டோவை ராஜமெளலி பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.