Thangalaan: வட மாநிலங்களில் பாராட்டுகளைப் பெறும் தங்கலான்: பாலிவுட்டில் கால் பதிப்பாரா ரஞ்சித்?
தமிழைத் தொடர்ந்து இந்தியில் வெளியான தங்கலான் திரைப்படம் வடமாநிலங்களில் இருக்கும் திரைப்பட ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கி சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது தங்கலான். பார்வதி, பசுபதி , மாளவிகா மோகனன், ஹரிகிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன், அர்ஜூன், ஆனந்த் சாமி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தனது ஒவ்வொரு படங்களிலும் சாதிய ஒடுக்குமுறை குறித்த பரவலான விவாதத்தை ஏற்படுத்தி வரும் இயக்குநர் ரஞ்சித் இப்படத்திலும் அதை செய்துள்ளார். இந்த முறை வரலாற்றையும் தொன்மத்தையும் தொடர்புபடுத்தி தன்னுடைய பார்வையை ஒரு சினிமாவாக எடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள நடிகர்கள். ஜிவி பிரகாஷின் இசை ஒரு பக்கம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக இரண்டாவது பாதியில் திரைக்கதை இன்னும் கொஞ்சம் தெளிவானதாக இருந்திருக்கலாம் என்பது பொது ரசிகர்களின் கருத்தாக இருந்தது. விமர்சனங்கள் இருந்தாலும் தங்கலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூல் ஈட்டியது படக்குழுவுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
வட மாநிலங்களில் பாராட்டுகளைப் பெறும் தங்கலான்
தமிழைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியில் இப்படம் வெளியானது. சமூக அரசியல் பார்வையுள்ள தமிழ் படங்கள் எப்போதும் இந்தி திரைப்பட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஷாருக் கானின் ஜவான் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க ஒரு தமிழ் ஆக்ஷன் மசாலா படமாக இப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிதாக கவனமீர்க்கவில்லை என்றாலும் இந்தி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதேபோல் இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படத்தை வட மாநிலங்களில் கொண்டாடி தீர்த்தார்கள். தற்போது தங்கலான் திரைப்படமும் இதே மாதிரியான ஒரு தாக்கத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Hindi version, This ending scene of #Thangalaan is an eye-opening truth.
— Pranjal singh (@Pranjalsingh321) September 9, 2024
They cannot make #History we forgot history. #Nagvanshi
Please watch with family. #Buddhism #NagaVasi#Thangalaan#DrBhimRaoAmbedkar#BhimArmy pic.twitter.com/4MYZp7dWOJ
குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பற்றி சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியில் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ரஞ்சித் படமாக்க இருந்தார். தற்போது தங்கலான் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. விரைவில் பாலிவுட்டில் தனது முதல் படத்தை ரஞ்சித் இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.