HBD Maniratnam: 30 ஆண்டுகளாக முன்னணி இயக்குநர்.. என்றுமே இளைஞர்.. மணிரத்னத்தின் பிறந்தநாள்!
HBD Maniratnam : தமிழ் சினிமாவில் அடையாள இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள் இன்று.
![HBD Maniratnam: 30 ஆண்டுகளாக முன்னணி இயக்குநர்.. என்றுமே இளைஞர்.. மணிரத்னத்தின் பிறந்தநாள்! Director Mairatnam birthday today special story HBD Maniratnam: 30 ஆண்டுகளாக முன்னணி இயக்குநர்.. என்றுமே இளைஞர்.. மணிரத்னத்தின் பிறந்தநாள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/bf9e1bf9ea51e02720d6785312e7735c1717307957182224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் பெருமித அடையாளமாக திரைத்துறையில் ஆளுமை செய்து வரும் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் இயக்குநர் மணிரத்னம். அன்று போல் இன்றும் திரைத்துறையில் தன்னுடைய டிரேட்மார்க் முத்திரையில் இன்று சற்றும் விலகாமல் அதே தீவிரத்துடன் செயல்பட்டு வரும் இந்த படைப்பாளியின் 68வது பிறந்தநாள் இன்று.
பாலுமகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சி வந்த காலகட்டத்தில் தன்னுடைய தனித்திறமையாலும் தனித்துவத்தாலும் வெற்றி நடை போட்டு என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். மற்ற கலைஞர்களின் படைப்புகளில் சற்றே மாறுபட்டு தரமான படைப்புகள் மூலம் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி வெற்றி கண்டவர். ஒரு இயக்குநரின் பங்கு என்பது திரைக்கதையை எழுதி அதற்கு ஏற்றார் போல நடிகர்களிடம் இருந்து சிறப்பானதை காட்சிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் அந்தக் காட்சியின் பிரேம் முழுக்க என்ன இருக்க வேண்டும் இருக்க கூடாது என்பதை அக்கறையுடன் முடிவெடுப்பதிலும் இயக்குநரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற புதுவித திரைப்பட உருவாக்கம் மூலம் பார்வையாளர்களை உணர செய்தவர். அந்த அளவுக்கு மெனெக்கெட்டு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
இன்றைய காலகட்டத்து இயக்குநர்களுக்கு சரிசமமாக மணிரத்னம் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இன்னும் சொல்ல போனால் இன்றைய சமகால இயக்குநர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு காலத்திற்கேற்ப தன்னை வடிவமைத்து கொண்டு இன்றும் முன்னணி இடத்தை தக்க வைத்து இருப்பது அவருக்கே உரித்தான தனிச்சிறப்பு. இயக்குநர்கள் நடிகர்கள் என பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் மணிரத்னம் மீது திரையுலகமே மரியாதை வைத்துள்ளது.
மணிரத்னம் படங்களில் திரைக்கதைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வதிலும் முக்கியத்துவம் கொடுப்பவர். திரை நடிகர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு முறையேனும் அவரின் படங்களில் நடித்து விட வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. அவரின் படங்கள் மூலம் நடிகர்களுக்கு புது வித பரிணாமங்களில் வெளிப்பட வாய்ப்புகள் அமைவது தனி சிறப்பு.
காதல் ரொமான்ஸ் உள்ளிட்ட கதைகளுக்கு பெயர் போனவர் மணிரத்னம் என்றாலும் தீவிரவாதம், மதக்கலவரம், சமூக பிரச்சனை குறித்த திரைக்கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் அதன் ஆழத்திற்கு சென்று கருத்து சொல்லும் அளவுக்கு தன்னுடைய படைப்புகளை அமைப்பதில்லை. என்றுமே தன்னை அனைவரும் விரும்பத்தக்க வகையில் வெகுஜன இயக்குநராகவே இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பலரும் கனவு கண்ட ஒரு கனவு ப்ராஜெக்ட்டான 'பொன்னியின் செல்வன்' படத்தை நனவாக்கி தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தியவர் மணிரத்னம். மேலும் வரும் காலங்களில் அவரின் பல பல படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் சாதனைகளை புரிய வாழ்த்துகள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)